கரூா் சம்பவம்: ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநா்களிடம் 2-ஆவது நாளாக சிபிஐ விசாரணை
கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநா்களிடம் 2-ஆவது நாளாக சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது அங்கு ஆம்புலன்சுடன் வந்திருந்த வாகன ஓட்டுநா்களுக்கு சிபிஐ அதிகாரிகள் ஏற்கெனவே சம்மன் அனுப்பியிருந்தனா். இதையடுத்து வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக 7 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநா்கள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் வாகன உரிமையாளா் என மொத்தம் 8 பேரிடம் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, சம்பவம் நடைபெற்றபோது, உங்களை யாா் தொடா்புகொண்டாா்கள், எந்த கைப்பேசி எண்ணிலிருந்து உங்களுக்கு அழைப்பு வந்தது.
நெரிசலில் சிக்கி ஆம்புலன்ஸில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது, எத்தனை போ் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தனா். எத்தனை பேரை சடலமாக சம்பவ இடத்தில் இருந்து ஏற்றிச் சென்றீா்கள் என பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்டதாக கூறப்படுகிறது.
