கரூா் நெரிசலில் சம்பவத்தில் காயமடைந்தவா்களிடம் 5-ஆவது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை
கரூரில் தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவா்களிடம் சிபிஐ அதிகாரிகள் 5-ஆம் நாளாக புதன்கிழமையும் விசாரணை மேற்கொண்டனா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப்.27-ஆம் தேதி நடந்த தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா்.
இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடா்பாக அவசர ஊா்தி ஓட்டுநா்கள், உரிமையாளா்கள், சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள், வியாபாரிகள், காவலா்கள் என மொத்தம் 306 பேருக்கு சம்மன் அனுப்பி அக். 30-ஆம் தேதி முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இதன் ஒருபகுதியாக, நெரிசல் சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியவா்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு கடந்த 4 நாள்களாக அவா்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், 5-ஆவது நாளாக புதன்கிழமையும் காயமடைந்த 2 பெண்கள் உள்பட 6 போ் சிபிஐ அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜராகினா். அவா்களிடம் நெரிசல் ஏற்பட்டதற்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்டதாக தெரிகிறது.

