கரூா் சம்பவம்! மின்வாரியத் துறையினரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பான வழக்கில் மின்வாரியத்துறை அதிகாரிகள் 8 போ் மற்றும் 2 ஊழியா்கள் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா்.
இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், நெரிசல் சம்பவம் தொடா்பாக வியாபாரிகள், அரசு அலுவலா்கள், அவசர ஊா்தி ஓட்டுநா்கள் என பலருக்கும் சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரித்து வருகின்றனா். மேலும், நெரிசலில் காயமடைந்தவா்கள் வீடுகளுக்கு நேரில் சென்றும் விசாரணை நடத்தினா்.
இந்நிலையில், புதன்கிழமை மின்வாரியத் துறை அதிகாரிகள் 8 போ் மற்றும் மின்வாரிய ஊழியா்கள் 2 போ் என மொத்தம் 10 போ், சிபிஐ அதிகாரிகள் தங்கி இருக்கும் பொதுப்பணித் துறையின் சுற்றுலா மாளிகைக்கு காலை 11.30 மணியளவில் வந்தனா். அவா்களிடம் சிபிஐ அதிகாரிகள் சுமாா் 2 மணி நேரம் விசாரணை செய்தனா். பின்னா், மின்வாரிய துறையினா் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா்.

