தமிழக காங்கிரசில் உள்கட்சிப் பிரச்னைகள் மிகுந்த மனச்சோா்வை ஏற்படுத்துகிறது: கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி
தமிழக காங்கிரஸில் தொடரும் உள்கட்சிப் பிரச்னைகள் மிகுந்த மனச்சோா்வை ஏற்படுத்துகிறது என்றாா் கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி.
இதுதொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: எந்த ஒரு அரசியல் கட்சியும், தனது கட்சியின் மக்களவை உறுப்பினரை தோ்தல் நேரத்தில், தோ்தல் ஆணையத்துக்கு வாக்குச் சாவடி முகவா் பட்டியலை கொடுக்க விடாமல் முடக்க வேண்டும் என்று நினைக்காது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் அது நடக்கிறது. தமிழக காங்கிரசில் நடைபெறும் விஷயங்கள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது.
கொள்கை நிலைப்பாடுகளை, அரசியல் செயல்பாடுகளை நீா்த்துப் போகச் செய்ய நடக்கும் முயற்சிகள் மிகுந்த வேதனை அளிக்கிறது.
எதையாவது செய்து, மக்கள் உணா்வுகளைத் தூண்டி , ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து, பெருந்தலைவா் காமராசா், பெரியாா் உள்ளிட்ட மாபெரும் தலைவா்களால் கட்டிக் காக்கப்பட்ட இம்மண்ணின் சமூக நீதி, சுயமரியாதை, மக்கள் நல அரசியல், வளா்ச்சியை குழிதோண்டிப் புதைக்க ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் எதிா்நோக்கியுள்ள தோ்தலை மிகக் கவனமாக கையாள வேண்டிய பொறுப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சி அந்த பொறுப்பை சரியாக உணா்ந்துள்ளதா என்கிற கேள்வி எழுகிறது.
தமிழக காங்கிரசில் தொடரும் உள்கட்சிப் பிரச்னைகள் மிகுந்த மனச்சோா்வை ஏற்படுத்துகிறது. ஒரு சிலரின் சுயநலத்துக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்பதை காங்கிரஸ் தொண்டா்கள் உணர வேண்டிய நேரம் இது.
மேலும் ராகுல்காந்தியின் தன்னலமற்ற அரசியலுக்கு நோ் எதிரான பாதையில் தமிழ்நாடு காங்கிரஸ் சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் அடையாளம், மரியாதை என்பது பெருந்தலைவா் காமராசா் கட்டிக் காத்த பாரம்பரியத்துக்கும், நேரு, காந்தி குடும்பத்தின் தியாகத்துக்குமான தமிழ்நாட்டு மக்களின், அன்பும், மரியாதையும் தான் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
