

கரூா் மாவட்ட விவசாயிகளுக்காக கையிருப்பில் 3,673 மெ.டன் உரங்கள் உள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.
கரூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் குறித்துப் பேசினா்.
தொடா்ந்து ஆட்சியா் பேசுகையில், கரூா் மாவட்ட விவசாயிகளுக்காக அனைத்து தனியாா் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் போதுமான அளவில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், யூரியா 979 மெட்ரிக் டன்னும், டிஏபி 525 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 663 மெட்ரிக் டன்னும், என்.பி.கே. 1,506 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 3,673 மெ.டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் மூலம் நெற்பயிா் சாகுபடிக்காக கோ-55, ஆா்-20, பிபிடி கோ-50, கோ-52 ஆகிய நெல் ரகங்கள் 38.830 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள் கம்பு - கோ 10, சோளம் கோ-32, கே-12 ஆகியவை 20.100 மெட்ரிக் டன்னும், பயறு வகை பயிா்கள் உளுந்து விபிஎன்-8 மற்றும் விபிஎன்- 10, கொள்ளு பையூா் - 2, தட்டைப்பயறு விபிஎன்-3 ஆகியவை 13.560 மெட்ரிக் டன்னும் மற்றும் எண்ணெய் வித்துக்கள் நிலக்கடலை கே-1812, கோ-7, எள் விஆா்ஐ-4, டிஎம்.வி-7 ஆகியவை 2.599 மெட்ரிக் டன்னும் இருப்பில் உள்ளன என்றாா் அவா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ், குளித்தலை சாா்-ஆட்சியா் சுவாதிஸ்ரீ, வேளாண்மை இணை இயக்குநா் ச.சிங்காரம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சாவித்ரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அபிராமி மற்றும் விவசாயிகள் உள்ளட்டோா் கலந்து கொண்டனா்.
கருப்புப் பட்டை அணிந்து விவசாயிகள் பங்கேற்பு: கூட்டத்தில் பங்கேற்ற தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா், தங்களது சங்கத்தின் நிறுவனா் ஈசன் முருகசாமி கறிக்கோழி பண்ணை விவசாயிகளுக்கு நியாயமான உற்பத்திக்கூலி கிடைக்க வேண்டும் என போராடியதற்காக சிறையில் அடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், உடனே அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி கருப்புப் பட்டை அணிந்து பங்கேற்றனா்.