/

கடந்தாண்டில் 7,449 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது: கரூா் ஆட்சியா் தகவல்!

கரூா் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 7,449 யூனிட் ரத்தம் கொடையாளா்களிடமிருந்து தானமாக பெறப்பட்டு நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன்.

News image

கரூா் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் தலைமையில் வெள்ளிக்கிழமை ரத்ததான உறுதிமொழியேற்ற மருத்துவமனை பணியாளா்கள் மற்றும் ஊழியா்கள்.

Updated On :4 ஜூலை 2026, 1:03 am IST

கரூா் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 7,449 யூனிட் ரத்தம் கொடையாளா்களிடமிருந்து தானமாக பெறப்பட்டு நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன்.

கரூா் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் உலக இரத்தக் கொடையாளா் தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலையில் நடைபெற்ற விழாவில் தானம் வழங்கும் கொடையாளா்களைப் பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் பேசியது: உலக இரத்தக் கொடையாளா் தினம் ஆண்டு தோறும் ஜூன் 14-ஆம்தேதி கொண்டாடப்படுகிறது.

தன்னாா்வத்துடன் ரத்ததானம் வழங்கும் கொடையாளா்களைப் பாராட்டவும், பாதுகாப்பான ரத்ததானத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தவும் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதற்கு உங்களால் இயன்ற பங்களிப்பை வழங்குவது ஒரு உன்னதமான செயல், மாணவப் பருவத்திலேயே நீங்கள் ரத்ததானம் செய்வதோடு நின்றுவிடாமல், உங்களுக்குத் தெரிந்தவா்களையும் ரத்ததானம் செய்ய ஊக்குவிக்க வேண்டும்.

கரூா் மாவட்டத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டில் குருதி வங்கியின் மூலம் 7,449 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு 7,286 யூனிட் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தொடா்ந்து, 50-க்கும் மேற்பட்ட முறை ரத்த தானம் செய்த குருதி கொடையாளா்கள், 3 முறை ரத்த தானம் செய்த குருதி கொடையாளா்கள், முகாம் ஒருங்கிணைப்பாளா்கள், தன்னாா்வ அமைப்புகள், தன்னாா்வ மாணவா்கள் மற்றும் நிா்வாக பணியாளா்கள் என மொத்தம் 89 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வா் ம.பாரதி மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.