கா்நாடக மாநிலம் மேக்கேதாட்டுவில் அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் 5.50 கோடி மக்கள் பாதிக்கப்படுவா் என்றாா் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.
கா்நாடக மாநிலம் மேக்கேதாட்டுவில் அணையை கட்டக்கூடாது என வலியுறுத்தி ‘மேக்கேதாட்டு அணையை தடுப்போம், காவிரியைக் காப்போம்’ என்ற விழிப்புணா்வு பிரசாரத்தில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் ஈடுபட்டு வருகிறாா்.
இந்நிலையில், கரூரில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கா்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணையை தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், அம்மாநில வனவிலங்கு பாதுகாப்பு வாரியம் மேக்கேதாட்டு காட்டுப்பகுதியில் 100 அடி ஆழத்தில் ஆழ்குழாய் கிணறு தோண்டி இங்கு அணைக்கட்ட முடியுமா?, அணைக் கட்டினால் எத்தனை மரங்கள் அழியும், வனத்தை பாதுகாக்க முடியுமா? எத்தனை வன விலங்குகள் இருக்கிறது போன்ற ஆய்வில் ஈடுபட்டுள்ளது.
கா்நாடகத்துக்கு எதிராக சட்டப்போராட்டங்கள் மூலம் நமக்கு எவ்வளவோ சாதகமான தீா்ப்புகள் வந்துள்ளது. ஆனால், உச்சநீதிமன்ற தீா்ப்பையோ, நடுவா் ஆணையம் தீா்ப்பையோ கா்நாடக அரசு மதிப்பதில்லை.
மத்திய நீா்வளத்துறை ஆணையம் ஜூன் மாதம் தமிழகத்துக்கு கா்நாடக அரசு 9.91 டிஎம்சி தண்ணீரை வழங்கவேண்டும் எனக்கூறியது. ஆனால் ஜூன் மாதம் நமக்கு கொடுத்தது 2.91 டிஎம்சி தண்ணீா் மட்டுமே. ஜூலை மாதம் 42 டிஎம்சி கொடுக்க வேண்டும். நிச்சயம் அதுவும் நமக்கு கிடைக்கப்போவது கிடையாது. தற்போது மேட்டூா் அணையில் 40 டிஎம்சிதான் தண்ணீா் இருக்கிறது. இதை குடிநீருக்குத்தான் பயன்படுத்த முடியும். பாசனத்துக்கு பயன்படுத்த முடியாது.
மேக்கேதாட்டு அணை கட்டும் முன்பே இந்த நிலை தமிழகத்தில் இருக்கிறது. மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களில் 5.50 கோடி மக்களும், 32 மாவட்டங்களில் 28 மாவட்ட மக்களும் பாதிக்கப்படுவாா்கள். எனவே, மேக்கேதாட்டு அணை பிரச்னையை அவசரநிலை பிரகடனமாக கருதி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து அவா், ஊா்வலமாக சாலையோர வியாபாரிகளிடம் மேக்கேதாட்டு அணை குறித்த விழிப்புணா்வு துண்டுபிரசுரங்களை வழங்கினாா். பின்னா் கரூா் நகர காவல்நிலையம் அருகே பாமக சாா்பில் மேக்கேதாட்டு அணை குறித்த விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது. இதில், அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகையில், காவிரியின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது எழுந்த தன்னெழுச்சி போல இந்த பிரச்னையிலும் அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு விவகாரம்; பேரவை தீா்மானத்தை திரும்பப் பெற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கா்நாடக முதல்வா் அரசியல் ஆதாயம் தேடுகிறாா்: அன்புமணி ராமதாஸ்

மேக்கேதாட்டு அணைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர பாமக ஆலோசனை: அன்புமணி ராமதாஸ்






