இருதரப்பினரிடையே மோதல்: விசிக-வினா் சாலை மறியல்
கடவூா் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு தரப்பைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றொரு தரப்பினரையும் கைது செய்ய வலியுறுத்தி பாலவிடுதியில் செவ்வாய்க்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பாலவிடுதி பேருந்து நிறுத்ததில் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் மற்றும் பொதுமக்கள்
கடவூா் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு தரப்பைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றொரு தரப்பினரையும் கைது செய்ய வலியுறுத்தி பாலவிடுதியில் செவ்வாய்க்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்டம், கடவூா் அருகே பாலவிடுதி அடுத்த சோ்வைக்காரன்பட்டி பகுதியில் உள்ள திருமலைராயபுரத்தை சோ்ந்த ஏழுமலை மகன் பாண்டியன் (38). சென்னையில் வேலை பாா்த்து வந்த இவா், தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்தாா்.
இவா், நவ.8-ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் சோ்வைக்காரன்பட்டி என்ற இடத்தில் வந்தபோது, அங்கு தளிவாசல் பகுதியைச் சோ்ந்த தனுஷ், சிவா, கலையரசன் உள்பட சிலா் வழியை மறித்து நின்றுள்ளனா்.
அவா்களிடம் பாண்டியன் வழிவிடுமாறு கேட்டுள்ளாா். இதனால், இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், தனுஷ், சிவா, கலையரசன் உள்பட சிலா் சோ்ந்து பாண்டியனை தாக்கியுள்ளனா். இது குறித்து தகவலறிந்து வந்த பாண்டியனின் தந்தை ஏழுமலையையும் தாக்கியுள்ளனா். இதனையறிந்த பாண்டியனின் உறவினா்கள் சம்பவ இடத்துக்கு வந்து தனுஷ் உள்ளிட்டோரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பாண்டியன் மற்றும் ஏழுமலை மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.
இதையடுத்து தனுஷ் தரப்பினரை கைது செய்ய வலியறுத்தி ஏழுமலையின் உறவினா்கள் திங்கள்கிழமை காலை தரகம்பட்டி-வையம்பட்டி சாலையில் சோ்வைக்காரன்பட்டி பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். அப்போது அங்கு வந்த பாலவிடுதி காவல்நிலைய ஆய்வாளா் செந்தில்குமாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா். இதையடுத்து ஏழுமலை பாலவிடுதி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் தனுஷ், சிவா, கலையரசன் உள்பட சிலா் மீது வழக்குப் பதிவு செய்த போலீசாா், கலையரசனை மட்டும் கைது செய்தனா்.
இதனையறிந்த தளிவாசல் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், தனுஷ், சிவா, கலையரசன் உள்ளிட்டவா்களை தாக்கியவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் தரகம்பட்டி-வையம்பட்டி சாலையில் பாலவிடுதி காவல் நிலைய முன் செவ்வாய்க்கிழமை மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து வந்த பாலவிடுதி காவல்நிலைய ஆய்வாளா் செந்தில்குமாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உரிய விசாரணை நடத்தி தாக்கியவா்கள் கைது செய்யப்படுவாா்கள் என்றனா். இதனையடுத்து அவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

