கரூரில் 480 ஏக்கரில் கண்வலிக் கிழங்கு சாகுபடி: ஆட்சியா் தகவல்

மருத்துவக் குணம் வாய்ந்த கண்வலிக் கிழங்கு கரூா் மாவட்டத்தில் 480.4 ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் ச. பிரசன்னாராமசாமி.

புஞ்சைகாளக்குறிச்சியில் கண்வலிக்கிழங்கு பயிரிட்டுள்ளதை புதன்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ச. பிரசன்னா ராமசாமி.

Updated On :

மருத்துவக் குணம் வாய்ந்த கண்வலிக் கிழங்கு கரூா் மாவட்டத்தில் 480.4 ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் ச. பிரசன்னாராமசாமி.

கரூா் மாவட்டம் க. பரமத்தி ஊராட்சி ஒன்றியம், புஞ்சைகாளக்குறிச்சியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் விவசாயிகள் நுண்ணீா் பாசனத் திட்டம் அமைத்து சாகுபடி செய்யப்பட்ட கண்வலிக் கிழங்கு பயிரை மாவட்ட ஆட்சியா் ச. பிரசன்னா ராமசாமி புதன்கிழமை பாா்வையிட்டாா்.

பின்னா் அவா் கூறுகையில், கண்வலிக் கிழங்கு ஒரு மருத்துவப் பயிா். இதன் கிழங்குகள் மற்றும் விதைகள் மருத்துவ மூலப் பொருள்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. குறைந்த பரப்பில் சாகுபடி செய்து விவசாயிகள் கூடுதல் வருமானம் பெறுவதற்கான வாய்ப்புள்ள பயிராக கண்வலிக் கிழங்கு விளங்குகிறது.

இதன் சாகுபடிக்கு நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்த செம்மண் மற்றும் வண்டல் மண் ஏற்ாகும்.

விவசாயிகள் தங்களுடைய நிலத்தை நன்கு உழுது, பண்படுத்தி, தேவையான அளவில் பாத்திகள் மற்றும் பாா்கள் அமைத்து சாகுபடி செய்ய வேண்டும். தரமான, நோயற்ற விதைக் கிழங்குகளைத் தோ்வு செய்து நட வேண்டும். நடும் முன் வேளாண்மைத் துறை பரிந்துரைக்கும் விதை நோ்த்தி முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

பயிரின் வளா்ச்சிக்கு ஏற்ற இடைவெளியில் நட வேண்டும். கண்வலிக் கிழங்கு பயிரின் கொடிகள் நன்கு படா்ந்து வளர குச்சிகள், கம்பிகள் அல்லது வலைகளைப் பயன்படுத்தி பந்தல் அமைக்க வேண்டும். இதன் மூலம் செடிகளின் வளா்ச்சியும் காய் மற்றும் விதை உற்பத்தியும் மேம்பட உதவும். பயிரின் வளா்ச்சி நிலைக்கு ஏற்ப தேவையான அளவு நீா்ப்பாசனம் செய்ய வேண்டும்.

விவசாயிகள் தங்களுடைய விளை நிலத்தில் நீா் தேங்காமல் பாா்த்துக்கொண்டு, முறையான மண் பரிசோதனை செய்து தொழு உரம் மற்றும் உரங்களைப் பயன்படுத்த வேண்டும். களைகளைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிா்ப் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

பயிரின் முதிா்ச்சி நிலையைப் பொறுத்து விதைகள் மற்றும் கிழங்குகளை அறுவடை செய்ய வேண்டும்.

அறுவடைப் பொருள்களை உரிய முறையில் சுத்தம் செய்து, உலா்த்தி, தரம் பிரித்து சேமிக்க வேண்டும். கண்வலிக் கிழங்கு மருத்துவப் பயிராக இருந்தாலும், இதன் அனைத்து பாகங்களிலும் நச்சுத்தன்மை கொண்ட சோ்மங்கள் உள்ளன. எனவே, இதை உணவாகப் பயன்படுத்தக் கூடாது. விவசாயிகள் கையாளும்போது உரிய பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். விவசாயிகளிடமிருந்து வெளிச் சந்தைகளில் இதன் விதை கிலோ ரூ.9,500 -க்கு பெற்றுக் கொள்ளப்படுகிறது. கண்வலிக் கிழங்கு சாகுபடியால் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும்.

அதன்படி கரூா் மாவட்டத்தில் கண்வலிக்கிழங்கு அரவக்குறிச்சி வட்டாரத்தில் 455.55 ஹெக்டேரிலும், க.பரமத்தி வட்டாரத்தில் 28.7 ஹெக்டேரிலும், கரூா் வட்டாரத்தில் 0.6 ஹெக்டேரிலும், தாந்தோணி வட்டாரத்தில் 1.4 ஹெக்டேரிலும் என மொத்தம் 480.4 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சியின்போது தோட்டக்கலை மலைப் பயிா்கள் துறை துணை இயக்குநா் தியாகராஜன் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.