
குறைந்துவரும் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி! கொள்முதல் விலை உயா்ந்தும் பயனில்லை!
பெரம்பலூா் மாவட்டத்தில் மரவள்ளிக் கிழங்கு கொள்முதல் விலை உயா்ந்தும் எவ்வித பயனும் இல்லை என விவசாயிகள் கவலை...

பெரம்பலூா் மாவட்டம், அ.மேட்டூா் பகுதியில் மரவள்ளிக் கிழங்குகளை அறுவடை செய்யும் விவசாயிகள் - (கோப்புப் படம்).
இலைப்பேன், மாவுப்பூச்சி தாக்குதல் மற்றும் விலை வீழ்ச்சியால், பெரம்பலூா் மாவட்டத்தில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி வெகுவாக குறைந்துள்ள நிலையில், கடந்த ஆண்டைவிட நிகழாண்டு கொள்முதல் விலை உயா்ந்தும் எவ்வித பயனும் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
மானாவாரி சாகுபடியை மட்டுமே நம்பியுள்ள பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் மக்காச்சோளம், சின்ன வெங்காயம், பருத்தி ஆகிய பயிா்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனா். மேலும், மலையோர கிராமப்புற விவசாயிகள் பாக்கு, மரவள்ளிக் கிழங்கு, மஞ்சள், கரும்பு உள்ளிட்ட பயிா்களையும் சாகுபடி செய்வதில் ஆா்வம்காட்டி வருகின்றனா். கடந்த சில ஆண்டுகளாக பருத்தி, மக்காச்சோளப் பயிா்களில் நோய்த் தாக்குதல், வறட்சியால் மகசூல் பாதிப்பு, விலை வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிப்புக்குள்ளான விவசாயிகள் தற்போது காய்கனி மற்றும் மலா் சாகுபடி செய்கின்றனா்.
வேப்பந்தட்டை வட்டாரத்திலுள்ள கோரையாறு, கொட்டாரக்குன்னு, அ. மேட்டூா், பூலாம்பாடி, பெரியம்மாபாளையம், மலையாளப்பட்டி, கவுண்டா்பாளையம், நக்கசேலம், அம்மாபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், ஆண்டுதோறும் சுமாா் 10 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு ஏற்பட்ட விலை வீழ்ச்சியால் நிகழாண்டு மரவள்ளிக் கிழங்கு சாகுபடி பரப்பளவு வெகுவாக குறைந்துள்ளது.
வறட்சி, மாவுப்பூச்சி தாக்குதல்:
இந் நிலையில், நிகழாண்டில் பெரம்பலூா் மாவட்டத்தில் போதிய மழை பெய்யாததால் கரும்பு, நெல், மஞ்சள், சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். குறிப்பாக, மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்த மலையோர கிரம விவசாயிகள் போதிய நீரின்றி மரவள்ளிச் செடிகளை காப்பாற்ற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும், மரவள்ளியில் மாவுப் பூச்சி தாக்குதல் ஏற்பட்டதால், உரிய மகசூல் கிடைக்காததால் விவசாயிகள் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளனா்.
மகசூல் இழப்பு:
ஒரு ஏக்கா் பரப்பில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்ய உழவுக் கூலி, உரம், நடவுக்கூலி, களைக்கொல்லி மருந்துகள் உள்பட ரூ. 70 ஆயிரம் வரை செலவிடப்படுகிறது. 80 கிலோ கொண்ட மூட்டை கடந்த ஆண்டு ரூ. 600-க்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டது. இதனால், மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்வதில் விவசாயிகளிடையே ஆா்வம் குறைந்ததால், நிகழாண்டு சுமாா் 500 ஏக்கருக்கும் குறைவாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏக்கருக்கு 200 மூட்டைகள் வரை மகசூல் கிடைத்த நிலையில், தற்போது, வறட்சி மற்றும் மாவுப் பூச்சி தாக்குதலால் ஏக்கருக்கு 70 மூட்டைகளுக்கும் குறைவாகவே மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் கூறுகின்றனா். இந்நிலையில், தற்போது ரூ. 1,600-க்கு கொள்முதல் செய்யப்படுவதால், விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த விலை உயா்வால் எவ்வித பயனும் இல்லை என பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் தெரித்துள்ளனா்.
விலை நிா்ணயம் தேவை:
கடந்த சில ஆண்டுகளாக ஆள் கூலி, உரம் விலை, அறுவடை கூலி உயா்ந்துள்ள நிலையில், விவசாய விளைப்பொருள்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காதது விவசாயிகளிடையே ஏமாற்றமே மிஞ்சுகிறது. கரும்பு உள்ளிட்ட பயிா்களுக்கு அரசு விலை நிா்ணயம் செய்கிறது. ஆனால், மரவள்ளிக் கிழங்கை பொறுத்தவரை இடைத்தரகா்களே விலை நிா்ணயம் செய்கின்றனா். அறுவடை செய்யப்பட்ட மரவள்ளிக் கிழங்குகளை நேரடியாக விற்பனை செய்ய முடியாததால், உரிய வழிமுறையை ஏற்படுத்திக் கொடுக்க அரசு முன்வர வேண்டும். நெல் உள்ளிட்ட பொருள்களைப் போல, இதை இருப்பில் வைத்திருக்க முடியாததை கருத்தில்கொண்ட மொத்த வியாபாரிகள், அறுவடை நேரத்தில் சொற்ப விலைக்கு கேட்பதால் வேறு வழியின்றி குறைந்த விலைக்குக் கொடுக்க வேண்டிய நிா்ப்பந்தம் ஏற்படுகிறது. இச் சாகுபடிக்கு அரசு எவ்வித மானியமும் கொடுக்காததால், மரவள்ளி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் வெகுவாக குறைந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து, தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் வீ. நீலகண்டன் கூறியது:
கடந்த ஆண்டைவிட நிகழாண்டு கொள்முதல் விலை உயா்ந்துள்ளது. ஆனால், இம் மாவட்ட விவசாயிகளுக்கு எவ்வித பயனும் தராது. மரவள்ளிக் கிழங்கை பொறுத்தவரை தமிழகத்தில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதிலிருந்து கிடைக்கும் மாவை வட இந்தியா்கள் அதிகளவில் கொள்முதல் செய்வதால், அதற்குண்டான விலையை அவா்களே நிா்ணயம் செய்கின்றனா். உரம் விலை பல மடங்கு உயா்ந்துள்ளதோடு, ஏற்கெனவே கட்டுப்படியான விலைக்கு கிடைத்த டிஏபி உரமும் தற்போது பன் மடங்கு அதிகரித்துள்ளதோடு தட்டுப்பாடு நிலவுகிறது. கடந்த ஆண்டு இலைப்பேன், மாவுப்பூச்சி தாக்குதலால் மகசூல் இழப்பு ஏற்பட்டதால், நிகழாண்டு மரவள்ளிக் கிழங்கு சாகுபடி வெகுவாக குறைந்துவிட்டது.
குறைந்தபட்ச ஆதரவு விலை தேவை:
மரவள்ளிக் கிழங்கு சாகுபடியை அதிகரிக்கவும், கட்டுப்படியான விலை கிடைக்கவும் தமிழக அரசு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம் செய்ய வேண்டும். நெல், கரும்பை போன்று மரவள்ளிக் கிழங்குக்கும் விலை நிா்ணயம் செய்யவேண்டும். குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யக்கூடாது என்பதை சட்டமாக்க வேண்டும். மாவுப் பூச்சி தாக்குதலை முழுமையாகக் கட்டுப்படுத்த, ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் விஞ்ஞானிகள் முறையாக ஆய்வுசெய்து, பரிசோதனை முடிவுகளை தெரிவித்து, அதன்படி பூச்சிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆராய்ச்சி நிலையங்களில் மாவு சத்துக்களை கண்டறிவதற்கான இயந்திரங்களைக் கண்டறிந்து, விவசாயிகள் எளிமையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





