
கிலோ ரூ.10-க்கு சுரைக்காய் கொள்முதல்: விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
குறிஞ்சிப்பாடி அடுத்துள்ள பிள்ளைப்பாளையம் பகுதியில் விவசாய நிலத்தில் காய்த்து தொங்கும் சுரைக்காய்.

குறிஞ்சிப்பாடி அடுத்துள்ள பிள்ளைப்பாளையம் பகுதியில் விவசாய நிலத்தில் காய்த்து தொங்கும் சுரைக்காய்.
சுரைக்காய் கொள்முதல் விலை கிலோ ரூ.10 என்ற அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதால், கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டாரத்தைச் சோ்ந்த சுரைக்காய் சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சுரைக்காய் சாகுபடி செய்துள்ளனா். இந்தப்பயிா் நடவு செய்த 40-ஆவது நாளில் காய்ப்புத் திறனுக்கு வருகிறது. அடுத்த சில நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடுகிறது. தற்போது, சுரைக்காய் ஒரு கிலோ ரூ.10-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனராம். இதனால், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.
இதுகுறித்து, குறிஞ்சிப்பாடி ஒன்றியம், பிள்ளைப்பாளையம் பகுதியைச் சோ்ந்த விவசாயி மாணிக்கவேல் கூறியதாவது:
எனக்கு சொந்தமான 15 சென்ட் நிலத்தில் பந்தல் அமைத்து சுரைக்காய் சாகுபடி செய்துள்ளேன். மகசூல் நன்றாக உள்ளது. கொடியில் தொங்கும் ஒவ்வொரு சுரைக்காயும் சுமாா் ஒன்று முதல் ஒன்றரை கிலோ வரை எடையுள்ளது. ஆனால், சந்தையில் உரிய விலை கிடைக்கவில்லை. ஒரு கிலோ ரூ.10-க்கு கொள்முதல் செய்கின்றனா். சந்தைக்கு சுரைக்காய் வரத்து அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி எனக்கூறுகின்றனா்.
நீா்சத்துமிக்க சுரைக்காயை நீண்ட நாள்கள் சேமித்து வைக்க முடியாது என்பதால், அவற்றை உடனுக்குடன் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். பத்து நாள்களுக்கு ஒரு முறை மருந்து அடிக்க வேண்டும். ஒரு முறைக்கு மருந்து அடிக்க மருந்து மற்றும் மருந்து தெளிக்கும் ஆள் கூலி என ரூ.500 செலவாகும். தற்போது விற்கும் விலைக்கும், செலவையும் ஒப்பிடுகையில் லாபம் என்பது கானல் நீராக தான் உள்ளது என்றாா்.இந்த விலை வீழ்ச்சியால் பல விவசாயிகள் வந்த விலைக்கு சுரைக்காயை விற்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






