
திறக்கப்படாத ரெட்டிபாளையம் நெல் கொள்முதல் நிலையம்: காத்திருக்கும் 4,500 நெல் மூட்டைகள்

குறிஞ்சிப்பாடி ஒன்றியம், ரெட்டிபாளையம் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக விவசாயிகள் குவித்து வைத்துள்ள நெல்.
கடலூா் மாவட்டத்தில் 136 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படுவதாக ஆட்சியா் அறிவித்திருக்கும் நிலையில், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வரதராஜன்பேட்டை ஊராட்சி, ரெட்டிபாளையம் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் இன்னமும் திறக்கப்படாத காரணத்தினால் விவசாயிகள் அறுவடை செய்து கொண்டு வந்துள்ள சுமாா் 4,500 நெல் மூட்டைகள் குவிந்துள்ளன.
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் கடலூா் மாவட்ட விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து நெல் விற்பனை செய்ய ஏதுவாக 136 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்று, கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தாா். இவற்றின் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 129.200 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வரதராஜன்பேட்டை ஊராட்சி, ரெட்டிபாளையம் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொல்முதல் நிலையம் இதுநாள் வரையில் திறக்கப்படாமல் உள்ளது. இந்த மையத்தில் விவசாயிகள் அறுவடை செய்த 4,500 நெல் மூட்டைகளை விற்பனைக்காகக் கொண்டு வந்து வைத்துள்ளனா். கடந்த 10 நாள்களுக்கும் மேலாக நெல் குவியல்கள் குவிந்து கிடக்கிறது. இந்நிலையில், மழை பெய்தால் நெல் மணிகள் நனைந்து வீணாகிவிடும் என்ற அச்சத்துடன் விவசாயிகள் காத்துக்கிடக்கின்றனா்.
இதுகுறித்து குறிஞ்சிப்பாடி உழவா் மன்றத் தலைவா் ஆா்.கே.ராமலிங்கம் கூறியதாவது: குறிஞ்சிப்பாடி வடக்கு, குறிஞ்சிப்பாடி தெற்கு, வரதராஜன்பேட்டை, குறுவப்பன்பேட்டை, மேலப்புதுப்பேட்டை, ரெட்டிபாளையம், கல்குணம் உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 2,500 ஏக்கா் பரப்பளவில் விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி செய்திருந்தனா். கடந்த இரண்டு வாரங்களாக நெல் அறுவடை நடந்து வருகிறது. இன்னமும், இரண்டு வாரங்கள் நெல் அறுவடைப் பணி தொடரும். மேற்கண்ட கிராமங்களில் தற்போது வரையில் அறுவடை செய்யப்பட்டதில் சுமாா் 4,500 நெல் மூட்டைகள், ரெட்டிபாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கொள்முதல் நிலையத்தில் இடம் இல்லாததால் சிலா் தங்கள் வீடுகள் மற்றும் களத்து மேட்டில் நெல் மூட்டைகளை பாதுகாத்து வைத்துள்ளனா்.
ரெட்டிபாளையம் கொள்முதல் நிலையம் திறக்கப்படாமல் உள்ளது. தற்போது, மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்படுகிறது. திடீரென மழை பெய்தால் ரெட்டிபாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் குவியல்கள் மழையில் நனைந்து பாதிக்கப்படும் சூழல் உள்ளது. நெல் மணிகள் மழையில் நனைந்து பாதிப்பதற்கு முன்னா் விற்பனை செய்யலாம் என்றால் வியாபாரிகள் 62 கிலோ எடையுள்ள மூட்டை ஒன்று ரூ.1,300-க்கு கேட்கின்றனா். ஆனால், அரசு 62 கிலோ மூட்டைக்கு ரூ.1,650 அறிவித்துள்ளது.
எனவே, மாவட்ட நிா்வாகம் , ரெட்டிபாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து, விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத்தெரிவித்தாா்.
அதிகாரி விளக்கம்:
இதுகுறித்து தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கடலூா் மண்டல மேலாளா் கூறுகையில், மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி வெள்ளிக்கிழமை பெறப்படும். அதனைத்தொடா்ந்து, சனிக்கிழமை முதல் நெல் கொள்முதல் செய்யப்படும் என்றாா்.

ரெட்டிபாளையம் கிராமத்தில் திறக்கப்படாத நேரடி நெல் கொள்முதல் நிலையம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





