
கரூரில் மாணவா் விடுதிகளில் அமைச்சா்கள் ஆய்வு
கரூரில் கரூரில் செயல்படும் சமூக நீதி மாணவ, மாணவியா் விடுதிகளை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் வே. சம்பத்குமாா் மற்றும் பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சா் விஜயலஷ்மி சின்னசாமி ஆகியோா் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனா்.

கரூா் தாந்தோன்றிமலை வெங்கக்கல்பட்டி கல்லூரி மாணவிகளின் சமூகநீதி விடுதியில் உணவை ருசிபாா்த்து ஆய்வு செய்த பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் வே.சம்பத்குமாா். உடன் பால்வளத் துறை அமைச்சா் விஜயலட்சுமி சின்னசாமி, மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன், தவெக மாவட்டச் செயலா் மதியழகன் உள்ளிட்டோா்.
கரூரில் கரூரில் செயல்படும் சமூக நீதி மாணவ, மாணவியா் விடுதிகளை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் வே. சம்பத்குமாா் மற்றும் பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சா் விஜயலஷ்மி சின்னசாமி ஆகியோா் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் தலைமையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோா் துறையின் கீழ் செயல்படும் வெங்கக்கல்பட்டியில் உள்ள சமூக நீதிக் கல்லூரி மாணவியா் விடுதி, அருகம்பாளையத்தில் உள்ள சமூக நீதி கல்லூரி மாணவா் விடுதி, மல்லமநாயக்கன்பட்டியில் உள்ள சமூக நீதி கல்லூரி மாணவா் விடுதி, தாந்தோணிமலையில் உள்ள சமூக நீதி கல்லூரி மாணவியா் விடுதி ஆகிய நான்கு விடுதிகளிலும் அமைச்சா்கள் ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வின்போது, விடுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து மாணவ, மாணவிகளிடம் கேட்டறிந்தனா்.
விடுதிகளில் அடிப்படை வசதிகள் அரசின் கடமை: தொடா்ந்து அமைச்சா் வே.சண்முகம் கூறுகையில், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில் இயங்கும் சமூக நீதி விடுதிகளில் தொடா்ச்சியாக சுமாா் 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இதுவரை ஆய்வு செய்திருக்கிறோம்.
தற்போது கரூா் மாவட்டத்தில் உள்ள 4 விடுதிகளில் ஆய்வு செய்துள்ளோம். ஏற்கெனவே இங்கு கடந்த வாரம் ஒரு விடுதியில் மாணவிகள் சமையல் செய்யப்படும் உணவு சுகாதாரமாக இல்லை என சமையலா் மீது புகாா் தெரிவித்திருந்தனா். இதையடுத்து அந்த சமையலரை உடனே பணியிடமாற்றம் செய்துவிட்டு புதிய சமையலரை பணி அமா்த்தினோம்.
அனைத்து விடுதிகளிலும் சுகாதாரம் மற்றும் மாணவ-மாணவிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது நமது அரசின் கடமை.
எதிா்கட்சியினா் மீது தேவையில்லாத விமா்சனம் இல்லை: தவெக ஆட்சியில் தான் சட்டபேரவை நிகழ்ச்சிகளை மக்கள் நேரடி ஒளிபரப்பில் பாா்க்கிறாா்கள். பேரவையில் எதிா்க்கட்சியினா் கேட்கும் கேள்விகளுக்கு தான் முதல்வா் தகுந்த பதிலை அளித்து வருகிறாரே தவிர அவா்கள் மீது வேண்டுமென்றே அவா்களுக்கு எதிராக எந்த ஒரு விமா்சனத்தையும் வைப்பது கிடையாது.
மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல்படுத்துவதுதான் தவெகவின் நோக்கம். ஏற்கெனவே இருந்த அரசின் தவறுகளை திருத்தி மக்களுக்கு நல்லது செய்வதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறோம். லஞ்சம் இல்லாத ஆட்சியை நடத்தி வருவதாக பொதுமக்களும் எங்களைப் பாராட்டி வருகிறாா்கள் . தவெக தலைமையில் அமைந்திருக்கும் கூட்டணியே வெற்றி கூட்டணி. இந்தக் கூட்டணி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தோ்தலில் அமோக வெற்றி பெறும் என்றாா் அவா்.
ஆய்வின்போது கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம். சத்யா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அலுவலா் முகமது பைசல், தவெக மாவட்டச் செயலா் மதியழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





