பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக. 17) நடைபெற உள்ளது எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்கள் பயனடையும் வகையில், பல்வேறு தனியார் துறை மூலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த முகாமில், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் தனியார் நிறுவனங்களில் காலியாக உள்ள ஆலோசகர், கிளை மேலாளர், விற்பனை பிரதிநிதிகள் உள்ளிட்ட பணியிடங்களுக்குத் தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிகிரி படித்தவர்கள் பங்கேற்று பயன்பெறலாம். மேலும், முகாமில் பங்கேற்பவர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை, கடவுச்சீட்டு அளவு புகைப்படங்களுடன் வரவேண்டும்.