மருத்துவர்கள் அனைவரும் மக்களுக்கான மருத்துவச் சேவைகளைச் செய்ய வேண்டும் என்றார் பேச்சாளர் இரா. எட்வின்.
பெரம்பலூர் மக்களுக்கான மருத்துவர் கழகம் சார்பில், பெரம்பலூர் லட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் பாராமொடிக்கல் கல்லூரிக் கூட்டரங்கில் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, நம் தேசத்தின் வலது திருப்பமும், இடது மாற்றும் என்னும் தலைப்பில் மேலும் அவர் பேசியது: மக்களோடு மக்களால் பின்னிப் பிணைந்து வாழ்பவர் இடதுசாரி. சக மனிதர்களோடு அந்நியப்பட்டு கிடப்பன் வலதுசாரி. மக்களுக்கான மருத்துவப் பணிகளை செய்யும் மருத்துவர்கள் இடதுசாரி மருத்துவர்கள், பணத்துக்காக மருத்துவப் பணி செய்வோர் வலதுசாரி மருத்துவர்கள் ஆவார்கள்.
இடதுசாரி மருத்துவர்கள் கம்யூனிஸ்ட்வாதிகளாக இருக்க வேண்டியதில்லை. ஆனால், எல்லா மருத்துவர்களும் வலதுசாரி மருத்துவர்களாக உள்ளனர். இடதுசாரி மருத்துவர்களை, வலது சாரி மருத்துவராக்கும் பணியை பாஜ அரசு செய்கிறது. மக்களுக்கான மருத்துவர் கழகத்தில் உள்ள மருத்துவர்கள், மக்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவச் சேவைகளையும் செய்ய வேண்டும். மருத்துவர்கள் கம்யூனிஸ்ட்டுகளாக மாறாவிட்டாலும், இடதுசாரிகளாக மாற வேண்டியது இன்றைய தேவையாகும் என்றார் அவர்.
தேசிய மருத்துவ ஆணையம் குறித்த ஒரு பார்வை என்னும் தலைப்பில், மக்களுக்கான மருத்துவர் கழக மாநிலச் செயலர் டாக்டர் சி. கருணாகரன் பேசியது: இந்தியாவில் 13.லட்சம் மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால், தற்போது 8 லட்சம் மருத்துவர்களே உள்ளனர். 1,165 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற அடிப்படையில் மகத்தான மருத்துவப்பணி செய்து வருகிறார்கள். இன்னும் 10 ஆண்டுகளில், சுமார் 450 புதிய மருத்துவக் கல்லூரிகள் இந்தியாவில் தொடங்கப்படும் என்றார் அவர். கருத்தரங்குக்கு டாக்டர் கதிரவன் தலைமை வகித்தார். டாக்டர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். செல்லதுரை, மருத்துவர்கள் விஜயகுமார், குணகோமதி, விஜய் ஆனந்த், சேசு, ரமேஷ், புவனேஸ்வரி, சேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









