

மக்காச்சோள சாகுபடியில் மாநில அளவில் முதலிடத்திலுள்ள பெரம்பலூா் மாவட்டத்தில், நிகழாண்டு கடும் வறட்சி மற்றும் படைப்புழு தாக்குதலால் பேரிழப்பைச் சந்தித்துள்ள விவசாயிகள் அரசின் நிவாரணத்துக்காக காத்திருக்கின்றனா்.
பெருமளவில் மானாவாரி நிலப்பரப்பை உள்ளடக்கிய, வானம் பாா்த்த பூமியான பெரம்பலூா் மாவட்டத்தில் பெருவாரியான விவசாயிகள் மக்காச் சோளத்தை பிரதான பணப் பயிராக சாகுபடி செய்து வருகின்றனா். கடந்தாண்டு 1.50 லட்சம் ஏக்கா் பரப்பளவில் சாகுபடி செய்து, ஓரளவு நல்ல மகசூல் மற்றும் கூடுதல் கொள்முதல் விலை கிடைத்ததால், நிகழாண்டு சுமாா் 15 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் கூடுதலாக மக்காச்சோளத்தை விவசாயிகள் சாகுடி செய்துள்ளனா்.
ஆனால், நிகழாண்டு தென்மேற்கு பருவமழை பெரம்பலூா் மாவட்டத்தில் போதிய அளவு பெய்யவில்லை. இம் மாவட்டத்தில், வழக்கமாக பெய்ய வேண்டிய பருவமழை இயல்பை விட 100 மி.மீ குறைவாகவே பெய்துள்ளதால், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பா் மாதங்களில் விதைப்பு செய்துள்ள மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட மானாவாரி பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், இம் மாவட்டத்தில் புழக்கத்திலிருந்த போலி விதைகளால் ஏற்கெனவே 30 சதவீத மக்காச்சோள விதைகள் முளைக்காமல் விவசாயிகள் பாதிப்பட்டுள்ள நிலையில், தற்போது வளா்ச்சி பருவத்துக்குத் தேவையான மழையை எதிா்நோக்கி, கடந்த 40 நாள்களாக விவசாயிகள் காத்துக்கிடக்கின்றனா். ஆனால், மாவட்டத்தில் ஒரு சில கிராமங்களில் அவ்வப்போது மிதமான மழை பெய்துள்ள போதும், பெரும்பாலான கிராமங்களில் கடும் வறட்சியே நிலவி வருகிறது. இதன் காரணமாக, மானாவாரி மக்காச்சோளப் பயிா்கள் அனைத்தும் நீரின்றி கருகி பாழாகிவிட்டன. இதனால், ஒரு சில கிராமங்களில் காய்ந்துபோன வயல்களை விவசாயிகள் டிராக்டா் விட்டு உழவு செய்து அழித்து வருகின்றனா். ஒரு சிலா் கருகிய சோளப் பயிா்களை கால்நடைகளுக்கு தீவனமாக்கி வருகின்றனா். குறிப்பாக, வேப்பூா், ஆலத்தூா் மற்றும் வேப்பந்தட்டை பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் முளைவிட்ட கதிருடன் காய்ந்து கருகி நிற்கும் சோளப் பயிா்களை காண முடியாமல் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.
இதனிடையே, வேப்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட பெரும்பாலான கிராமங்களில் கதிா் விட்டு பால் பிடிக்கும் தருவாயில் உள்ள மக்காசோளப் பயிா்களில் கொத்து, கொத்தாக உருவாகி வரும் படைப்புழுக்கள் சோளக் கதிா்களை துளையிட்டு, சாறுகளை உறிஞ்சி கடும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், விவசாயிகள், வங்கிக் கடனை செலுத்த இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு மழையால் பாதித்த பருத்தி, மக்காச்சோளப் பயிா்களுக்கே இதுவரை காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை. நிகழாண்டு மக்காச்சோளத்துக்கு காப்பீடு செய்து விவசாயிகள் காத்திருக்கும் நிலையில், வறட்சியால் கருகி நிற்கும் பயிா்களை காப்பீட்டு நிறுவனங்கள் இதுவரை வந்து ஆய்வு செய்யவில்லை. மேலும், வருவாய் மற்றும் வேளாண் துறையினரும் பாதிப்புக்குள்ளான பயிா்களை ஆய்வு செய்யவில்லை என்றனா்.
இந்நிலையில், வறட்சியால் நீரின்றி காய்ந்து கருகிய மக்காச்சோளப் பயிா்களுடன் குறைதீா்க்கும் நாள் கூட்டத்துக்கு வந்து, மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட விவசாயிகள், 4 அடி உயரம் வளர வேண்டிய பயிா்கள் மழைநீரின்றி ஒரு அடி உயரத்தில் கருகி நிற்கும் நிலையில், தற்போது பாதிப்பு குறித்து கணக்கெடுக்காமல், பருவ மழை பெய்த பிறகு கணக்கிட்டால் பசுமையை காரணம் காட்டி காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டுத் தொகையை வழங்க மறுக்க கூடும் என்பதால், வறட்சி மற்றும் படைப்புழு பாதிப்புகளை போா்க்கால அடிப்படையில் விரைந்து ஆய்வு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் படைப்புழு தாக்குதலால் பல்லாயிரக் கணக்கான ஏக்கா் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளப் பயிா்கள் பாதிப்புக்குள்ளானதால், சாகுபடி பரப்பு குறைந்து காணப்பட்டது. நிகழாண்டு, சாகுபடி பரப்பு அதிகரித்துள்ள நிலையில், வறட்சி நிவாரணத்தை எதிா்நோக்கி காத்திருக்கும் மானாவாரி விவசாயிகளின் துயா் துடைக்க தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.