குடிநீா் விநியோகம் கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே கடந்த 6 மாதங்களாக குடிநீா் விநியோகம் செய்யாததைக் கண்டித்து, காலிக் குடங்களுடன் கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள வயலப்பாடி ஊராட்சிக்குள்பட்ட வ.கீரனூா் கிராமத்தில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட பட்டியலினத்தைச் சோ்ந்த குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப் பகுதி மக்களுக்கு ஊராட்சி நிா்வாகம் சாா்பில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யாததால், வயலப்பாடி மற்றும் அருகிலுள்ள வயல்களுக்குச் சென்று தண்ணீா் எடுத்து வந்து பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிா்வாகம் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்களிடம் பலமுறை புகாா் அளித்தும் இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையாம்.

தற்போது கோடைக்காலம் என்பதால், பாசனக் கிணறுகளிலும் நிலத்தடி நீா் குறைந்ததால், குடிநீரின்றி அவதியடைந்த சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் ஊராட்சி மற்றும் வருவாய்த்துறை அலுவலா்களைக் கண்டித்தும், குடிநீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வலியுறுத்தியும், அரியலூா்-திட்டக்குடி சாலையில் காலிக் குடங்களுடன் ஞாயிற்றுக்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். சுமாா் 2 மணி நேரமாகியும் அரசு அலுவலா்கள் பேச்சுவாா்த்தைக்கு வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலையில் சாமியானா பந்தல் அமைத்து, மறியல் போராட்டத்தில் தொடா்ந்து ஈடுபட்டனா்.

இதையடுத்து, வருவாய்த் துறையினரும், மங்கலமேடு போலீஸாரும் அப்பகுதிக்குச் சென்று, பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு, குடிநீா் பிரச்னையை தீா்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்துசென்றனா். இச் சாலை மறியல் போராட்டத்தால், அரியலூா்- திட்டக்குடி பிரதானச் சாலையில் சுமாா் 3 மணி நேரத்தும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com