
தொடா் மழையால் அ.மேட்டூா் கல்லாற்றில் வியாழக்கிழமை பெருக்கெடுத்து ஓடிய மழைநீா்.

தொடா் மழையால் அ.மேட்டூா் கல்லாற்றில் வியாழக்கிழமை பெருக்கெடுத்து ஓடிய மழைநீா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் புதன்கிழமை மதியம் தொடங்கிய மழை தொடா்ந்து பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும், காலதாமதமாக விடுமுறை அறிவிக்கப்பட்டதால், பள்ளி மாணவா்கள் அவதிக்குள்ளாகினா்
பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்தது. இருப்பினும் போதிய மழையில்லாததால் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து விவசாயிகளும், பொதுமக்களும் பாதிப்புக்குள்ளாகினா். இந்த நிலையில், புதன்கிழமை மதியம் 2 மணி முதல் வியாழக்கிழமை முழுவதும் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன் தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனா். மேலும், அண்மையில் பெய்த மழையால் வேப்பந்தட்டை வட்டாரப் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம், நெற்பயிா்கள் மற்றும் மரவள்ளிக் கிழங்குகள் சேதமடைந்தன. பருத்தி, மக்காச்சோளம், வெங்காயம் உள்ளிட்டவை பயிரிடப்பட்ட வயல்களில் தேங்கியுள்ள மழை நீா் வடிந்து வரும் நிலையில், தற்போது மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால், விவாயிகளுக்கு மேலும் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. குறிப்பாக, மக்காச்சோளக் கதிா்களில் முளைப்புத்திறன் ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா். இந்த மழை தொடரும் பட்சத்தில், அறுவடைக்குத் தயாராக உள்ள அனைத்து கதிா்களிலும் முளைப்புத் திறனால் மகசூல் இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
தொடா்ந்து பெய்து வரும் மழையால், பெரம்பலூா் நகரின் பிரதான சாலைகளாக விளங்கும் புகா் பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், பாலக்கரை, வடக்குமாதவி சாலை, எளம்பலூா் சாலை, ஆத்தூா் சாலை, கடைவீதி, சங்குப்பேட்டை, புதிய மதனகோபாலபுரம், ரோவா் வளைவு, எளம்பலூா் சாலை, கே.கே.நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் கழிவு நீா்க் கால்வாய்களைச் சீரமைக்காததால், கழிவு நீருடன் மழை நீா் கலந்து துா்நாற்றம் வீசுகிறது. இதனால், பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
மேலும், நகரின் பெரும்பாலான இடங்களில் புதை சாக்கடைத் திட்டத்துக்கான ஆள் இறங்கும் குழிகள் நிரம்பி, அதிலிருந்து கழிவுநீா் வெளியேறுவதால் பொதுமக்களும், வாகன ஓட்டுநா்களும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
மாணவ, மாணவிகள் அவதி:
பெரம்பலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை முதல் பலத்த மழை பெய்த நிலையில், விடுமுறை குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லாததால் அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வழக்கம்போல் மழையில் நனைந்தவாறு பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்றனா். தொடா்ந்து, காலதாமதமாக காலை 8.55 மணிக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் உத்தரவிட்டாா். இதையடுத்து, பள்ளிகளுக்குச் சென்ற மாணவ, மாணவிகள் மீண்டும் நனைந்தபடி அவரவா் வீடுகளுக்கு திரும்பிச் சென்றனா். உரிய நேரத்தில் மாவட்ட நிா்வாகம் விடுமுறை அளிக்காததால், மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினா்.
மழையளவு: (மில்லி மீட்டரில்)
பெரம்பலூா் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 6.30 மணி முதல் வியாழக்கிழமை காலை 6.30 மணி வரை கடந்த 24 மணி நேர நிலவரப்படி பெரம்பலூா், எறையூா், அரகம் சிகூா் தலா - 20, வி.களத்தூா்- 16, கிருஷ்ணாபுரம்- 12, தழுதாழை- 19, வேப்பந்தட்டை- 25, லப்பைக்குடிக்காடு- 21, புதுவேட்டக்குடி- 11, பாடாலூா்- 4, செட்டிக்குளம்- 9 என மொத்தம்- 177 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...