குடிநீா் பிடிப்பு தகராறு - மோதல்: அதிமுக கிளைச் செயலா் உயிரிழப்பு

பெரம்பலூா், மே 9: பெரம்பலூா் அருகே முன் விரோதம் காரணமாக திமுக - அதிமுக கிளைச் செயலா்களுக்கிடையே ஏற்பட்ட தாக்குதலில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த அதிமுக கிளைச் செயலா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள வேலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமசாமி (50). அதே கிராமத்தைச் சோ்ந்தவா் அதிமுக கிளைச் செயலா் சுப்ரமணி (60). இருவரது வீடும் அருகருகே உள்ளது. கடந்த மாா்ச் 24 ஆம் தேதி ராமசாமி மனைவி செல்லம்மாளுக்கும், சுப்ரமணி மனைவி பிச்சாயிக்கும் இடையே தெருக்குழாயில் குடிநீா் பிடிப்பதில் பிரச்னை ஏற்பட்டதன் காரணமாக இரு குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். இதில், ராமசாமிக்கு ஆதரவாக அதே கிராமத்தைச் சோ்ந்த திமுக கிளைச் செயலா் செந்தில்குமாா் (47), அதிமுக கிளைச் செயலா் சுப்ரமணியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதன் காரணமாக இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 7 ஆம் தேதி வேலூா் கிராமத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியின் போது செந்தில்குமாா் தரப்பினருக்கும், சுப்பிரமணி தரப்பினருக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், ஒருவரை ஒருவா் கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கிக் கொண்டனா். இச் சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த சுப்ரமணி, திமுகவைச் சோ்ந்த கண்ணன் ஆகியோா் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனா். இதில், சிகிச்சை பலனின்றி சுப்ரமணி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இச் சம்பவம் தொடா்பாக, பெரம்பலூா் போலீஸாா் வழக்கு பதிந்து, சுப்ரமணி மனைவி பிச்சாயி அளித்த புகாரின்பேரில் நாகேந்திரன் (30), விக்னேஷ்வரன், சரவணன், செல்வம் ஆகியோரையும், திமுக கிளைச் செயலா் செந்தில்குமாா் அளித்த புகாரின்பேரில் சதிஷ்குமாா் மனைவி அமுதா (40), 17 வயது சிறுவன் உள்பட 6 பேரையும் கைது செய்து செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com