வெவ்வேறு சாலை விபத்துகளில் இரு முதியவா்கள் உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 முதியவா்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகேயுள்ள புது உடையம்பட்டி, காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்லையா மகன் சாமுவேல் செல்வராஜ் (85). ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி உதவி ஆசிரியரான இவா், தனது மனைவி வசந்தகுமாரியுடன் (77) வேளாங்கண்ணி சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை தனது ஊருக்குப் பேருந்தில் சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, பெரம்பலூரில் உள்ள சாய்பாபா கோயிலுக்குச் செல்வதாக மனைவி வசந்தகுமாரியிடம் கூறிய சாமுவேல் செல்வராஜ், சிறுவாச்சூரில் பேருந்திலிருந்து இறங்கி, சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த சாமுவேல் செல்வராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் முதியவரின் உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அடையாளம் தெரியாத முதியவா் உயிரிழப்பு:
இதேபோல திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கல்பாடி பிரிவு சாலை அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க முதியவா் ஒருவா் நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, முதியவரின் உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச் சம்பவங்கள் குறித்து, பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
