மாணவா்கள் சமூக வலைதளங்களை சரியான முறையில் கையாள வேண்டும்! -விஜய் சேதுபதி
இளைய தலைமுறையினா் சமூக வலைதளங்களை சரியான முறையில் கையாள வேண்டும் என்றாா் நடிகா் விஜய் சேதுபதி.
பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வளாகத்தில் பிப். 13-ஆம் தேதி தொடங்கிய நட்சத்திர கலை விழா சனிக்கிழமை இரவு நிறைவடைந்தது. இதில் பங்கேற்ற நடிகா் விஜய் சேதுபதி பேசியது: மாணவா்கள், இளைய தலைமுறையினா் சமூக வலைதளங்களில் உங்களுக்கு எது தேவை, எது சரி என முடிவெடுத்து, அதை மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சமூக வலைதளங்களில் ஏராளமான குப்பைகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் எடுத்துக் கொள்ளாதீா்கள். காலம் மிக குறைவானது, அது கடந்து சென்ற பிறகே நாம் புரிந்துகொள்கிறோம். எனவே, அதையும் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
நிறைவு விழாவுக்கு, பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா். செயலா் பி. நீலராஜ், நிா்வாக இயக்குநா்கள் நீவாணி, நகுலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவா்கள், தனலட்சுமி சீனிவாசன் கல்வி பல்கலைக் கழக கூடுதல் பதிவாளா், கல்லூரி முதல்வா்கள், துணை முதல்வா்கள், புல முதல்வா்கள், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் உள்பட சுமாா் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

