உளுந்து விதைக்கும் முன் விதைப் பரிசோதனை அவசியம்: வேளாண் துறை அறிவுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் உளுந்து விதைப்பதற்கு முன் விதைகளைப் பரிசோதனை செய்து, அதிக மகசூல் பெற வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
Published on

பெரம்பலூா் மாவட்டத்தில் உளுந்து விதைப்பதற்கு முன் விதைகளைப் பரிசோதனை செய்து, அதிக மகசூல் பெற வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பெரம்பலூா் விதைப் பரிசோதனை நிலையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் மாா்கழி, தை பட்டத்தில் விவசாயிகளால் உளுந்து சாகுபடி செய்யப்படுகிறது. இம் மாவட்ட விவசாயிகள் விபிஎன்- 8, 9, 10, 11, டி- 9, கோ- 6, ஏடிடீ- 5 மற்றும் நாட்டு ரகங்களை பயிரிட்டு வருகின்றனா். உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகள் தமிழக விதைச்சான்று மற்றும் உயிா்மச் சான்று துறையால் சான்றளிக்கப்பட்டு, சான்று அட்டை பொருத்திய விதைகளைப் பயன்படுத்த வேண்டும். சேமித்து வைத்துள்ள அல்லது விற்பனையாளா்களிடமிருந்து பெறப்பட்ட உளுந்து விதைகளை பரிசோதனை செய்த பிறகு விதைப்புக்குப் பயன்படுத்தலாம்.

எனவே, விதைப் பரிசோதனை நிலையத்தில் விதைகளின் முளைப்புத் திறன், ஈரப்பதம், புறத்தூய்மை, பிற ரக கலவை மற்றும் பிற பயிா்கள் போன்ற காரணிகள் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

விதையின் குறைந்தபட்ச முளைப்புத்திறன் 75 சதவீதமாக இருக்க வேண்டும். பரிசோதனை செய்து முளைப்புத்திறன் இயல்பானது, இயல்பற்றது, கடின விதைகள், உயிரற்றது மற்றும் முளைவிடாத உயிருள்ள விதைகள் என்னும் வகையில் கணக்கிடப்படுகிறது.

முன்கூட்டியே அறிவதால் விதைகளின் அளவை முளைப்புத் திறனுக்கு ஏற்றவாறு சரியாக கணக்கிட்டு பயன்படுத்தலாம். மேலும், பயிா்களின் எண்ணிக்கையை சரியாகப் பராமரிக்க முடியும். உளுந்து விதையின் அதிகபட்ச ஈரப்பதம் 9 சதவீதமாக இருக்க வேண்டும். இப் பருவ மழைக்காலங்களில் சேமிக்கப்பட்ட உளுந்து விதைகளின் ஈரப்பதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் பூச்சி, பூஞ்சை பாதிப்புக்குள்ளாகி முளைப்புத்திறன் குறைய அதிக வாய்ப்புள்ளது.

உளுந்து விதையின் புறத்தூய்மை 98 சதவீதமாக இருக்க வேண்டும். புறத்தூய்மை பரிசோதனையில் பிற விதை மற்றும் கலவை விதை, உயிரற்ற பொருள்கள் கண்டறியப்படுவதால், விதையின் இனத்தூய்மை மற்றும் புறத்தூய்மை பாதுகாக்கப்படுகிறது. பிற ரக கலவைகள் ஏதேனும் இருந்தால், அதன் முடிவுகளையும் தெரிந்து கொள்ளலாம்.

மாவட்ட மைய நூலகம் அருகேயுள்ள விதைப்பரிசோதனை நிலையத்தில் ஒரு விதை மாதிரிக்கு ரூ. 80 பரிசோதனைக் கட்டணமாக செலுத்தி, பயிா் மற்றும் பிற ரகம், குவியல் எண் ஆகியவை குறித்த விவரச் சீட்டுடன், உளுந்து 100 கிராம் அனுப்பி விதைகளை பரிசோதனை செய்து பயன்பெறலாம்.

X
Dinamani
www.dinamani.com