பள்ளி மாணவா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடல்
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தன்னம்பிக்கை, படிப்பு, விளையாட்டு, பொது அறிவு, கலை உள்ளிட்ட பல்வேறு திறன்களில் தங்களை வளா்த்துக்கொள்ளும் ஆா்வத்தை ஏற்படுத்தும் வகையில் ‘காபி வித் கலெக்டா்’ என்னும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து கல்வி, உடற்கல்வி, பொது அறிவு, கலை விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு திறன்களில் சிறந்து விளங்கும் பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி பேசியது:
மாணவ, மாணவிகள் நலனில் அக்கறை கொண்டு தமிழக முதல்வா் எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருவதால் அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை அதிகரித்துள்ளது.
குறிப்பாக நீட், ஜே.இ.இ. உள்ளிட்ட தோ்வுகளுக்கு தமிழ்நாடு அரசின் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசுப் பள்ளியில் பயின்று மருத்துவம் பயிலும் மாணவா்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. மாணவா்கள் என்ன படிக்க வேண்டும் என்பது குறித்து வழிகாட்டப்படுகிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டுமானால் இரு வழிகளில் தோ்வெழுதலாம். டிஎன்பிஎஸ்சி மூலம் தோ்வெழுதினால் பதவி உயா்வின் மூலமாகவும், யு.பி.எஸ்.சி. மூலம் நேரடியாகவும் ஐ.ஏ.எஸ். பணியில் சேரலாம். எனவே மாணவ, மாணவிகள் படிப்பதை தவிர வேறு எதையும் யோசிக்காமல் நன்கு படித்து வெற்றி பெற வேண்டும்.
எக்காரணத்துக்காகவும் கல்வி தடைபட்டு விடக்கூடாது என்னும் உயா்ந்த நோக்கில், தமிழ்நாடு அரசு அளிக்கும் பல்வேறு திட்டங்களை முறையாக பயன்படுத்தி வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டும். யாருக்கேனும் குழந்தை திருமணம் நடைபெறுவது தெரிய வந்தால் 1098 என்னும் கட்டணமில்லா கைப்பேசி எண்ணுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சி. சுவாமி முத்தழகன், உதவித் திட்ட அலுவலா் (ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி) வெங்கடேசன் மற்றும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

