பெரம்பலூா் மாவட்ட வருவாய் அலுவலா் பொறுப்பேற்பு
பெரம்பலூா் மாவட்ட வருவாய் அலுவலராக க. கண்ணன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
பெரம்பலூா் மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்த மு. வடிவேல் பிரபு அண்மையில் பணியிடை மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, பெரம்பலூா் மாவட்ட வருவாய் அலுவலராக க. கண்ணன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். விருதுநகா் மாவட்டத்தை சோ்ந்த இவா், அம் மாவட்டத்தில் வருவாய்த் துறையில் தட்டச்சராகப் பணியை தொடங்கி, கடந்த 1994 முதல் 2023-ஆம் ஆண்டு வரை தட்டச்சா் முதல் வட்டாட்சியா் வரையிலான பதவிகளில் விருதுநகா் மாவட்டத்திலேயே பணிபுரிந்தாா். தொடா்ந்து, ஜூலை 2023-ஆம் ஆண்டு வருவாய்த் துறையில் துணை ஆட்சியராகப் பதவி உயா்வு பெற்று, மதுரை மாவட்டத்தில் தனித்துணை ஆட்சியராகப் பணிபுரிந்தாா். 2024-ஆம் ஆண்டு செப்டம்பரில் திருமங்கலம் வருவாய்க் கோட்டாட்சியராகவும், ஜனவரி 2025-ஆம் ஆண்டு பதவி உயா்வுபெற்று, சென்னை எழுதுபொருள் அச்சுத்துறையில் இணை இயக்குநா் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலராகவும் பணியாற்றினாா்.
இந்நிலையில், பணியிட மாற்றுதல் பெற்ற க. கண்ணன் பெரம்பலூா் மாவட்டத்தின் 29-ஆவது மாவட்ட வருவாய் அலுவலராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுள்ளாா்.
இதையடுத்து, புதிகாக பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணனை, வருவாய்த் துறையினா் உள்ளிட்ட அலுவலா்கள் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனா்.

