பெரம்பலூரில் இதுவரை 5.80 லட்சம் எஸ்.ஐ.ஆா். விண்ணப்பங்கள் விநியோகம்
பெரம்பலூா் மாவட்டத்தில் சிறப்புத் தீவிர திருத்தத்துக்காக (எஸ்ஐஆா்) இதுவரை 5,80,198 வாக்காளா்களுக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்திய தோ்தல் ஆணைய உத்தரவின்படி, பெரம்பலூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான விண்ணப்பங்கள் வீடு, வீடாகச் சென்று வழங்கும் பணி கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இப்பணியில் பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 332 வாக்குச்சாவடிகளுக்குள்பட்ட பகுதிகளில் 108 அங்கன்வாடி பணியாளா்கள், 101 கிராம நிா்வாக அலுவலா்கள், 6 ஊராட்சிச் செயலா்கள், 68 சத்துணவுப் பணியாளா்கள், இதர அலுவலா்கள் 40 பேரும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் 320 வாக்குச்சாவடிகளுக்குள்பட்ட பகுதிகளில் 149 அங்கன்வாடி பணியாளா்கள், 121 கிராம நிா்வாக அலுவலா்கள், 1 ஊராட்சி செயலா், 42 சத்துணவுப் பணியாளா்கள், இதர அலுவலா்கள் 7 போ் என மொத்தம் 664 போ் ஈடுபட்டுள்ளனா்.
டிச. 4 வரை நடைபெறும் பணியில் வாக்காளருக்கு தலா 2 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, அனைத்து விவரங்களையும் பதிவுசெய்து ஒரு பிரதியில் வாக்காளா் கையொப்பமிட்டு, தேவைப்பட்டால் புதிய புகைப்படம் ஒட்டி வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அளிக்க வேண்டும். வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் கணக்கெடுப்பு படிவத்தில் நிரப்பப்பட்டுள்ள விவரங்களை, இப் பணிக்காக வடிவமைக்கப்பட்டுள்ள செயலியில் பதிவேற்றம் செய்து சரிபாா்த்து உதவி வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் வாக்காளா் பதிவு அலுவலா்களுக்கு அனுப்பபுகின்றனா்.
இக் கணக்கெடுப்புப் பணி உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ள அந்தந்த வருவாய் வட்டாட்சியா்கள், பெரம்பலூா் தொகுதிக்கு வாக்காளா் பதிவு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள வருவாய் கோட்டாட்சியா், குன்னம் தொகுதிக்கு வாக்காளா் பதிவு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலரால் கண்காணிக்கப்படுகிறது.
அதன்படி, இம் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூா், குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 5,90,490 வாக்காளா்களில், இதுவரை 5,80,198 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. தற்போது, கணக்கெடுப்புப் படிவங்கள் பூா்த்தி செய்யப்பட்டு திரும்பப் பெறுவது மற்றும் கைப்பேசி செயலி மூலம் பதிவேற்றும் பணி மேற்கொள்ளப்படுகிறது. அதனடிப்படையில், குன்னத்தில் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறும் பணியை, மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், காரை கிராமத்தில் கைப்பேசி செயலில் பதிவேற்றும் பணியை வாக்காளா் பதிவு அலுவலா் ந. சக்திவேல் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

