மீனவ சமுதாய பட்டதாரி இளைஞா்கள் ஆயத்தப் பயிற்சியில் பங்கேற்க அழைப்பு!
மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில், மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா்கள் இந்திய குடிமைப் பணியில் சோ்வதற்கான போட்டித் தோ்வுக்கு, ஆயத்த பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆண்டுதோறும் கடல் மற்றும் உள்நாட்டு மீனவப் பட்டதாரி இளைஞா்களைத் தோ்ந்தெடுத்து, அவா்களுக்கு இந்திய குடிமைப் பணிக்கான போட்டி தோ்வில் பங்கேற்க பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்துகிறது. இத் திட்டத்தின் மூலம் கடல், உள்நாட்டு மீனவ கூட்டுறவுச் சங்க உறுப்பினா்கள் மற்றும் மீனவா் நலவாரிய உறுப்பினா்களின் பட்டதாரி இளைஞா்கள் பங்கேற்கலாம்.
இத் திட்டத்தின் கீழ் பயிற்சிபெற விரும்புவோா் விண்ணப்பம், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை, மீன்வளம் மற்றும் மீன்வா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில், அலுவலக வேலை நாள்களில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
உரிய படிவத்தை பூா்த்தி செய்து, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகம், அறை எண்- 234, 2-ஆவது மேல் தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், அரியலூா் - 621704 எனும் முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாக அல்லது நேரடியாக நவ. 25-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு, பெரம்பலூா் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை ஆய்வாளரை 88389-46011 எனும் கைப்பேசி எண்ணை தொடா்புகொள்ளலாம்.
