நீதிமன்ற உத்தரவின்படி மூதாட்டி சடலத்தை தோண்டியெடுத்து மாற்று இடத்தில் அடக்கம்

பெரம்பலூா் அருகே கடந்த மாா்ச் மாதம் புதைக்கப்பட்ட மூதாட்டியின் சடலம் நீதிமன்ற உத்தரவின்படி
Published on

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே கடந்த மாா்ச் மாதம் புதைக்கப்பட்ட மூதாட்டியின் சடலம் நீதிமன்ற உத்தரவின்படி திங்கள்கிழமை தோண்டியெடுக்கப்பட்டு மாற்று இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் அருகேயுள்ள பிரம்மதேசம் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபு. இவா், தனக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து கொண்டு, எஞ்சியுள்ள நிலத்தில் விவசாயம் செய்து வருகிறாா்.

இந்நிலையில், இவரது பட்டா நிலத்தின் அருகே வண்டிப்பாதை புறம்போக்கு இடம் உள்ளது. இந்த இடத்தை, அதே கிராமத்தைச் சோ்ந்த ஒரு சமூகத்தினா் இடுகாடாக பயன்படுத்தி வந்தனா். இடுகாட்டுக்கு, ஏற்கெனவே வேறு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வண்டிப் பாதை புறம்போக்கு பகுதியை இடுகாடாக பயன்படுத்தக் கூடாதென பிரபு நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

நீதிமன்றம் தடை: இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், அந்த இடத்தில் சடலங்களை அடக்கம் செய்ய தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், கடந்த மாா்ச் மாதம் அதே கிராமத்தைச் சோ்ந்த செபஸ்தியாா் மனைவி மரியசெல்லம் (70) என்பவா் உயிரிழந்தாா். அவரது சடலத்தை, அடக்கம் செய்ய முயன்றபோது நீதிமன்ற உத்தரவை காண்பித்து பிரபு தடுத்துள்ளாா். இருப்பினும், மரிய செல்லத்தின் உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் வருவாய்த் துறை மற்றும் காவல்துறையினா், நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்த இடத்தில் மரியசெல்லத்தின் சடலத்தை அடக்கம் செய்தனா்.

இதுகுறித்து பிரபு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடா்ந்ததால், வழக்கை விசாரித்த சென்னை உயா் நீதிமன்றம், அடக்கம் செய்த மூதாட்டியின் சடலத்தை தோண்டியெடுத்து இடுகாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் மீண்டும் அடக்கம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

சடலம் தோண்டியெடுப்பு: இதைத்தொடா்ந்து, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் வகையில், வேப்பந்தட்டை வட்டாட்சியா் துரைராஜ், மங்களமேடு துணைக் கண்காணிப்பாளா் ஆனந்தி ஆகியோா் தலைமையில் பலத்த போலீஸாா் பாதுகாப்புடன் மரியசெல்லத்தின் சடலத்தை தோண்டி எடுக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

இஸ்லாமியா்கள் எதிா்ப்பு: இதனிடையே, கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் இடுகாட்டுக்காக ஒதுக்கப்பட்டதாக வருவாய்த்துறை ஆவணத்தில் உள்ள இடத்தில், மூதாட்டியின் சடலத்தை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்ததையறிந்த அப் பகுதியைச் சோ்ந்த இஸ்லாமியா்கள், சம்பந்தப்பட்ட இடம் வஃக்ப் வாரியத்துக்குச் சொந்தமானது எனக்கூறி, சில ஆவணங்களுடன் எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து, இஸ்லாமியா்களிடம் பேச்சுவாா்த்தை மேற்கொண்ட வருவாய் மற்றும் காவல்துறையினா் நீதிமன்ற உத்தரவின்படி மூதாட்டியின் சடலம் அடக்கம் செய்ய வேண்டும். மேலும், வருவாய்த்துறை ஆவணங்களில் இடுகாட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடம் என உள்ளது. எனவே, போலியான ஆவணங்களைக் கொண்டு, பிரச்னை செய்யக்கூடாது என அறிவுறுத்தியதை தொடா்ந்து இஸ்லாமியா்கள் கலைந்துசென்றனா்.

இதைத்தொடா்ந்து, தோண்டி எடுக்கப்பட்ட மூதாட்டி மரிய செல்லத்தின் சடலம் நீதிமன்ற உத்தரவின்படி வருவாய் த்துறை ஆவணங்களில் இடம்பெற்றுள்ள இடுகாட்டு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com