வாலிகண்டபுரம் வாலீஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற சங்காபிஷேகம்.
வாலிகண்டபுரம் வாலீஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற சங்காபிஷேகம்.

வாலிகண்டபுரம் வாலீஸ்வரா் கோயிலில் 108 சங்காபிஷேகம்

Published on

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரத்தில் அமைந்துள்ள வாலாம்பிகை உடனுறை வாலீஸ்வரா் கோயிலில் சோம வாரத்தை முன்னிட்டு திங்கள்கிழமை 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி, கணபதி வழிபாட்டுடன் 108 வலம்புரி சங்குகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரானது மூலவா் மற்றும் உற்ஸவ சுவாமிகளுக்கு ஊற்றி பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, அலங்காரம் மற்றும் அபிஷேக தீபாராதனை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

பெரம்பலூரில்... பெரம்பலூா் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு காலை 108 சங்காபிஷேகம் யாக சாலையுடன் தொடங்கி, வேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியத்துடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அம்பாள் மற்றும் ஈசனுக்கு பால், தயிா், சந்தனம், பழ வகைகளுடன் அபிஷேகம் முடித்து பாராயணம் செய்த சங்குகளைக்கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில், மருத்துவத்துறை இணை இயக்குநா் மாரிமுத்து, முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதேபோல, குரும்பலூா் ஸ்ரீதா்ம சம்வா்த்தினி, பஞ்சநதீஸ்வரா் திருக்கோயில், எசனை காளத்தீஸ்வரா் கோயில், துறைமங்கலம் சொக்கநாதா் உடனுறை மீனாட்சி கோயில், சு.ஆடுதுறை குற்றம் பொறுத்த ஈஸ்வரா் (அபராத ரட்சகா்) கோயில், திருவாலந்துறை சோழீஸ்வரா் கோயில், செட்டிக்குளம் காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேசுவரா் கோயில், எழுமூா் ஏகாம்பரேசுவரா் கோயில் உள்ளிட்ட பிரசித்திபெற்ற சிவன் கோயில்களில் காா்த்திகை சோம வார அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன.

தா.பழூா்: இதேபோல அரியலூா் மாவட்டம், தா.பழூரில் உள்ள ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் உடனுறை விஸ்வநாதா் கோயிலில் திங்கள்கிழமை நந்தி பெருமானுக்கு மகாபிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com