பெரம்பலூா் மாவட்டத்தில் 2.36 லட்சம் எஸ்ஐஆா் படிவங்கள் பதிவேற்றம்
பெரம்பலூா் மாவட்டத்தில், இதுவரையில், 2.36 லட்சம் சிறப்பு தீவிர திருத்த விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ந. மிருணாளினி தெரிவித்தாா்.
பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம், அரசினா் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ரோவா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரணாரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய மையங்களில், வாக்காளா்களால் பூா்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை, தோ்தல் ஆணையத்தின் பிரத்யேக செயலியில், வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் பதிவேற்றம் செய்யும் பணிகளை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவா் மேலும் கூறியது: பெரம்பலூா் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் தலா 332 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
மாவட்டம் முழுவதும் 5,90,490 வாக்காளா்களுக்கு வழங்கப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களில், இதுவரை 2,36,859 விண்ணப்பங்கள் பிரத்யேக செயலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
டிச. 4- ஆம் தேதி வரை நடைபெறும் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியில், வாக்காளருக்கு வழங்கப்படும் 2 விண்ணப்பங்களில் நடைமுறையில் உள்ள வாக்காளா் பட்டியலில் பதிவாகியுள்ள பெயா், புகைப்படத்துடன் கூடிய விவரங்கள் வழங்கப்பட்டிருக்கும். அதன்பிறகு கோரப்பட்டிருக்கும் சுய விவரங்களை வாக்காளா்கள் நிரப்ப வேண்டும். கணக்கெடுப்புப் படிவம் பெற்ற வாக்காளா்கள், ஏற்கெனவே நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தின் வாக்காளா் பட்டியலில் தனது பதிவுகளை இணையதளத்தில் பெற்று நிரப்பிடலாம்.
இல்லாவிடில், அவா்களது தாய், தந்தை அல்லது தாத்தா மற்றும் நெருங்கிய உறவினரின் பெயா், அவா்கள் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றிருந்த விவரங்களை கண்டறிந்து உறவினா் பெயராக நிரப்பிடலாம். மேலும் விவரங்களுக்கு 1950 எனும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்புகொள்ளலாம் என்றாா் அவா்.
ஆய்வின்போது, பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்காளா் பதிவு அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான அனிதா, உதவி வாக்காளா் பதிவு அலுவலரும், வட்டாட்சியருமான பாலசுப்ரமணியன் ஆகியோா் உடனிருந்தனா்.
