சிறுபான்மையின மகளிா் 30 பேருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கல்
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் சிறப்புக் குழு ஆய்வுக் கூட்டத்தில் சிறுபான்மையின மகளிா் 30 பேருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி முன்னிலையில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த, திருச்சி கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இனிகோ இருதயராஜ், சிறுபான்மையின மக்களின் நலன் சாா்ந்து வழங்கப்பட்ட கோரிக்கைகள், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை ஆய்வு மேற்கொண்டு, சிறுபான்மை அமைப்புகளால் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, சிறுபான்மையினா் மகளிருக்கு மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் பயிற்சி நிறுவனத்தின் மூலம் பயிற்சி பெற்ற 30 பேருக்கு ரூ. 1.92 லட்சம் மதிப்பில் மின் மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரங்களை சிறுபான்மையினா் சிறப்பு குழு உறுப்பினா் இனிகோ இருதயராஜ் வழங்கினாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், தமிழ்நாடு கிறிஸ்தவ உபதேசியாா் மற்றும் பணியாளா்கள் நலவாரிய உறுப்பினா் ஜான் பிரான்சிஸ் எபினேசா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ரெ. சுரேஷ்குமாா், வருவாய் கோட்டாட்சியா் அனிதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
