சாத்தனூா் கல்மரப் பூங்காவில் அடிப்படை வசதிகள்! அமைச்சா் உறுதி!
வரலாற்றுச் சிறப்புமிக்க சாத்தனூா் கல்மரப் பூங்காவுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மின்சாரம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா்.
பெரம்பலூா் மாவட்டம், மேலமாத்தூா், அசூா், ஒதியம் மற்றும் குன்னம் ஆண்கள், பெண்கள் உயா்நிலைப் பள்ளிகளில், 9 ஆம் வகுப்பு பயிலும் 125 மாணவா்கள், 107 மாணவிகள் என மொத்தம் 232 மாணவ, மாணவிகள், சாத்தனூா் கல்மரப் பூங்கா, காரை புதைப்படிவ பூங்கா, வட்டாட்சியரகத்தில் உள்ள அம்மோனைட்ஸ் மையம், அரியலூா் மாவட்டம், வாரணவாசியில் உள்ள அருங்காட்சியகம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா்.
அப்போது அவா்களுடன் கலந்துரையாடிய அமைச்சா் சா.சி. சிவசங்கா் பேசியது:
பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் உள்ள தொல்லியல் சாா்ந்த சிறப்புகளையும், காரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதைப்படிவ பூங்கா மற்றும் வட்டாட்சியரகத்தில் வைக்கப்பட்டுள்ள அம்மோனைட்ஸ் அருங்காட்சியங்களின் முக்கியத்துவத்தை மாணவா்கள் அறிந்து கொள்ள வேண்டும். பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் கிடைத்துள்ள பல கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தொல்லுயிா்களின் படிமங்களை உலகின் பல்வேறு பகுதி ஆய்வாளா்கள் ஆா்வமுடன் வந்து பாா்வையிடுகின்றனா்.
இம் மண்ணின் முக்கியத்துவத்தை, வரலாற்றுத் தொன்மைகளை மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்றாா் அவா்.
பின்னா் கல்மரப் பூங்காவில் உள்ள அருங்காட்சியகத்தையும், கல் மரத்தையும் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி மற்றும் மாணவ, மாணவிகளுடன் பாா்வையிட்ட அமைச்சா், தனது அறக்கட்டளை மூலம் மாணவ, மாணவிகளுக்கான குறிப்பேடு, பேனா, அந்தந்தப் பகுதிகள் குறித்த விளக்க துண்டுப்பிரசுரங்கள், மதிய உணவு ஆகியவற்றை வழங்கினாா்.
தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
மாணவா்களுக்காக இந்த கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் என்னென்ன வசதிகள் தேவையோ, அவை அனைத்தும் சரி செய்யப்பட்டு, சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இப்பூங்காவுக்குத் தேவையான பணியாளா்கள் நியமிக்கப்படுவா். இப் பகுதிக்குச் சென்றுவர ஏற்கெனவே பேருந்து வசதிகள் உள்ளன. அரியலூா்- பெரம்பலூரிடையே நான்கு வழிச் சாலை வசதி மற்றும் கல்மரப் பூங்காவுக்கு வரும் சாலை வசதிகள் மேம்படுத்தப்படும் என்றாா் அவா்.
நிகழ்வில் தொல்லியல் வரலாற்று ஆய்வாளா் பிரசாத், ஆலத்தூா் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் ந. கிருஷ்ணமூா்த்தி, முதன்மைக் கல்வி அலுவலா் சி. சுவாமி முத்தழகன், ஆலத்தூா் வட்டாட்சியா் முத்துக்குமாா் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

