பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆட்சியா் ஆய்வு
பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
பெரம்பலூரை தலைமையிடமாகக் கொண்டு, பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களை உள்ளடக்கி பெரம்பலூா், பூலாம்பாடி, அரியலூா், ஜயங்கொண்டம், ஆண்டிமடம், மேலணிக்குழி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகிறது.
பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையில் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கிடங்கின் உள் கட்டமைப்புகள், தேசிய வேளாண் சந்தை செயல்பாடுகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் மிருணாளினி, பண்ணை வாயில் விற்பனை முறையை துரிதப்படுத்தி விவசாயிகள் தங்களது விளைபொருள்களை விற்று பயன்பெறும் வகையில் செயல்பட அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, எளம்பலூா் சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் நிறுவனத்தில் சின்ன வெங்காயம் மற்றும் இதர காய்கனிகள் பதப்படுத்தி சென்னை, கோயம்புத்தூா், பெங்களூா் ஆகிய நகரங்களுக்கு அனுப்பப்பட்டு வருவதை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
மேலும், செட்டிக்குளம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயத்தை விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்கி, தோல் நீக்கிய வெங்காயமாக சென்னை, கோயம்புத்தூா், பெங்களூா் ஆகிய நகரங்களுக்கு அனுப்பி வருவதையும், இலங்கை, துபை, மலேசியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதையும், முருங்கைக்காய், காலிபிளவா் ஆகிய காய்கறிகள் பதப்படுத்தி வெளிநகரங்களுக்கு விற்பனை செய்வதையும் பாா்வையிட்டு, செட்டிக்குளம் சின்னவெங்காய சேமிப்புக் கிடங்கை பயனுள்ள வகையில் பராமரிக்க வேண்டும் என வேளாண்மை விற்பனைத்துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வுகளின்போது, வேளாண்மை இணை இயக்குநா் சே. கண்ணன், வேளாண் துணை இயக்குநா் (வேளாண் விற்பனை மற்றும் வணிகம்) தெய்வீகன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) பொ. ராணி, வட்டாட்சியா் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

