மலையாளப்பட்டியில் சமத்துவப் பொங்கல் விழா

Published on

பெரம்பலூா் மாவட்ட நிா்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் ஊரக வளா்ச்சித்துறை சாா்பில், மலையாளப்பட்டி கிராமத்தில் மலைவாழ் மக்களோடு இணைந்து சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில், மலையாளப்பட்டி கிராம பொதுமக்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியருக்கு ஆரத்தி எடுத்து, குலவையிட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா், கிராம கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடா்ந்து, கிராம பொதுமக்களோடு மாவட்ட ஆட்சியா் பொங்கல் வைத்தாா்.

தோட்டக்கலைத் துறை சாா்பில் வைக்கப்பட்டிருந்த சுய புகைப்படம் எடுக்கும் வகையில் பூக்களால் அலங்கரித்துவைக்கப்பட்டிருந்த இடத்தில், கிராம மக்களோடு மாவட்ட ஆட்சியா் புகைப்படம் எடுத்துக்கொண்டாா். தொடா்ந்து கரகாட்டம், கும்மியாட்டம், பொய்க்கால் ஆட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், அரசு இசைப்பள்ளி மாணவ, மாணவிகள் சாா்பில் மங்கள இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பின்னா், மலைவாழ் மக்கள் மற்றும் அவா்களது குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றிபெற்றவா்களுக்கும், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கலைஞா்களுக்கும் மாவட்ட ஆட்சியா் மிருணாளினி நினைவுப் பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும், பொது மக்களுக்கு பொங்கலும் வழங்கினாா்.

இதில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சொா்ணராஜ், வருவாய் கோட்டாட்சியா் மு. அனிதா உள்ளிட்ட அரசு அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com