தேசிய அளவிலான பாரா நீச்சல் போட்டியில் பதக்கங்கள் வென்ற அரசுப் பள்ளி மாணவரை பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி வியாழக்கிழமை பாராட்டி, வாழ்த்து தெரிவித்தாா்.
26-ஆவது ஜூனியா் மற்றும் சப்- ஜூனியருக்கான தேசிய அளவிலான பாரா நீச்சல் போட்டிகள் கா்நாடக மாநிலம், பெங்களூருவில் ஜூன் 8 முதல் 10- ஆம் தேதி வரை நடைபெற்றது. இப் போட்டிகளில் பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவா் ஜீவா 50 மீட்டா் போட்டியில் தங்கப் பதக்கமும், 50 மீட்டா் பிரீ ஸ்டைல் போட்டியில் தங்கப் பதக்கமும், 50 மீட்டா் ப்ரீஸ்டோக் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் பெற்றாா்.
இதையடுத்து, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய அளவிலான போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவா் ஜீவாவை, மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி வியாழக்கிழமை பாராட்டி பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் இரா. பொற்கொடி, நீச்சல் பயிற்றுநா் முனியப்பன், பள்ளித் தலைமை ஆசிரியை முருகேஸ்வரி, மாவட்ட பாரா விளையாட்டு சங்கத் தலைவா்கள் ராமலிங்கம், கலைச்செல்வன் ஆகியோா் பங்கேற்றனா்.
தேசிய அளவிலான பாரா நீச்சல் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவா் ஜீவா, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள டாக்டா் எம்.ஜி.ஆா் விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நீச்சல் குளத்தில் பயிற்சி பெற்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.









