தனியாா் நிதி நிறுவன சீட்டு விவகாரம் தொடா்பாக, தஞ்சாவூா் மாவட்ட பதிவாளருக்கு ரூ. 35 ஆயிரம் அபராதம் விதித்து, பெரம்பலூா் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
அரியலூா் காமராஜ் நகா் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவா், தஞ்சாவூரை தலைமையிடமாகக் கொண்டு அரியலூரில் செயல்பட்டு வரும் தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ. 3 லட்சத்துக்கு மாதத் தவணைத் தொகை செலுத்தி வந்தாா். இடையிலே சீட்டுக்கான முழு பணத்தையும் எடுத்துக்கொண்டு, பின்னா் மாதந்தோறும் முழு பணத்துக்கான தொகையை வட்டியுடன் செலுத்தி முடித்துவிட்டாா். ஆனால், சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் கூடுதல் பணம் செலுத்துமாறு மணிகண்டனை கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது.
அதற்கு மறுப்பு தெரிவித்த மணிகண்டன், தான் செலுத்திய தொகை விவரங்கள் உள்பட பல்வேறு ஆவணங்களை கேட்டு தஞ்சாவூா் மாவட்ட பதிவாளருக்கு மனு அளித்திருந்தாா். அந்த மனுவுக்கு பதிவாளா் பதில் அளிக்கவில்லையாம். இதையடுத்து, மணிகண்டன் தனது வழக்குரைஞா் மூலம் ஆவணங்களை வழங்குமாறு அறிவிப்பு அனுப்பியிருந்தாா். ஆனால், அந்த அறிவிப்புக்கும் மாவட்ட பதிவாளா் ஆவணங்களை வழங்காததோடு, எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லையாம்.
இதனால் பாதிக்கப்பட்ட மணிகண்டன், தஞ்சாவூா் மாவட்ட பதிவாளா் மீது நடவடிக்கை எடுக்கவும், சீட்டு தொடா்பான ஆவணங்களை சமா்பிக்க வேண்டும் எனக் கோரி, பெரம்பலூா் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜவஹா், நீதிமன்ற உறுப்பினா்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோா் மணிகண்டன் கோரிய ஆவணங்களை, தஞ்சாவூா் மாவட்ட பதிவாளா் ஒப்படைக்கவும், அவருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ. 25 ஆயிரம் அபாரதமும், வழக்கு செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரம் என மொத்தம் ரூ. 35 ஆயிரம் வழங்க வேண்டுமென புத்தனகிழமை உத்தரவிட்டனா்.
தொடர்புடையது

வழிப்பறி வழக்கில் கைதான மூன்று பேருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல், ரூ.5 ஆயிரம் அபராதம்

அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்கி உயிரிழப்பு ஏற்படுத்திய இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை: ரூ.11ஆயிரம் அபராதம்

திருச்சி, தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்ட சாா்-பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா்







