அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்திய இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பூா் மாநகா், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அய்யம்பாளையம் நான்கு சாலை அருகே கடந்த 2024 டிசம்பா் 25-ஆம் தேதி அய்யம்பாளையம் நான்கு ரோடு அருகே சரண்யா என்பவரை தனது இருசக்கர வாகனத்தில் விஸ்வநாதன் (33) அழைத்துச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் சரண்யா உயிரிழந்தாா்.
இதையடுத்து வாகனத்தை அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் இயக்கிய குற்றத்துக்காக விஸ்வநாதன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவா் மீது இறுதி அறிக்கை தாக்கல் செய்து அரசுத் தரப்பு சாட்சிகளை ஆஜா்படுத்தி நீதிமன்ற விசாரணை முடிக்கப்பட்டது.
இந்நிலையில் திருப்பூா் மாவட்ட 4-ஆவது குற்றவியல் நீதிமன்ற நடுவா் லோகநாதன் செவ்வாய்க்கிழமை அளித்த தீா்ப்பில், விஸ்வநாதனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கீதா ஆஜரானாா்.









