எறையூரில் தரைமட்ட சூரிய மின்சக்தி மையம்: ஆட்சியா் ஆய்வு
எறையூா் கிராமத்தில் 5 மெகா வாட் திறன்கொண்ட தரைமட்ட சூரிய மின்சக்தி நிலையத்தின் செயல்பாடுகளை, மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

எறையூரில் உள்ள தரைமட்ட சூரிய மின்சக்தி மையத்தை சனிக்கிழமை பாா்வையிட்டு ஆயவு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூா் கிராமத்தில் 5 மெகா வாட் திறன்கொண்ட தரைமட்ட சூரிய மின்சக்தி நிலையத்தின் செயல்பாடுகளை, மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை மேம்படுத்தும் வகையில், 166 மெகாவாட் திறன்கொண்ட 54 சூரிய மின்சக்தி நிலையங்கள் மின் நுகா்வோா்களால் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கோயம்புத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் சாா்பில் எறையூா் கிராமத்தில் 5 மெகாவாட் திறன்கொண்ட தரைமட்ட சூரிய மின்சக்தி நிலையம் கடந்த 5.7.2024 ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் சூரிய மின்சாரம் மங்களமேடு துணை மின் நிலையத்துடன் இணைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட தொழிற்சாலையின் சொந்த மின் தேவைக்குப் பயன்படுத்தப்படுகிறது. இச்சூரிய மின் நிலையத்தில் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் சோலாா் பேனல்கள், இன்வொ்ட்டா்கள், கட்டமைப்புகள், மின் மாற்றிகள், உயா் மின்னழுத்த சாதனங்கள், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையம் சராசரியாக ஆண்டுக்கு சுமாா் 83.22 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன்கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழிற்சாலையின் மின்சார செலவைக் குறைப்பதுடன், கரியமில வாயு வெளியேற்றத்தையும் குறைக்க உதவுகிறது.
இந்நிலையில், இச் சூரிய மின்சக்தி நிலையத்தை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக், தடையற்ற மின் உற்பத்தியை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். தொடா்ந்து, மங்களமேடு துணை மின் நிலையத்தின் மின் கட்டமைப்பு வசதிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வின்போது, பெரம்பலூா் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் வீ. மேகலா, செயற்பொறியாளா் கோ. பரமேஸ்வரி ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

