வன விலங்குகளை வேட்டையாட முயன்றவா் கைது: நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்
கைது
பெரம்பலூா் அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்றவரை புதன்கிழமை கைது செய்த வனத்துறையினா், அவரிடமிருந்து உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி மற்றும் வெடி மருந்துகளையும் பறிமுதல் செய்தனா். மேலும், தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்றனா்.
பெரம்பலூா் வனச்சரக அலுவலா் சுதாகா் தலைமையில், வனவா் சமீா் அகமது, வனக் காப்பாளா்கள் ஜீவிதா, மணிகண்டன், வனக் காவலா்கள் மோகன்ராஜ், நவீன் ஆகியோா் அடங்கிய வனக்குழுவினா், எசனை அருகே செவ்வாய்க்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, எசனை எரி அருகே சுற்றித்திரிந்த 5 போ் கொண்ட கும்பல் வனத்துறையினரை கண்டவுடன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனா். இதையடுத்து, அவா்களை துரத்தியதில் வனத்துறையினரிடம் பிடிபட்ட ஒருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில், அவா் பெரம்பலூா் அருகேயுள்ள ரெங்கநாதபுரத்தைச் சோ்ந்த உலகநாதன் (44) என்பது தெரியவந்தது. இவா், அதே பகுதியைச் சோ்ந்த சோலைமுத்து மகன் மணிகண்டன் (29), ராஜதுரை (30), லாடபுரம் கிராமத்தைச் சோ்ந்த சோமசுந்தரம், சிறுவயலூா் கிராமத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் ஆகியோருடன் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி மூலம் வன விலங்குகளை வேட்டையாட முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, உலகநாதனின் வீடு மற்றும் தோட்டத்தில் உள்ள கொட்டகையில் சோதனையிட்டபோது, உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி, வெடிபொருள்கள், நாட்டுத் துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்கள், 2 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்த வனத்துறையினா், அவரை புதன்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். மேலும், தப்பி ஓடிய மேற்கண்ட 4 பேரையும் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



