ஆடிப்பெருக்கு: கோயில்களில் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 04th August 2019 03:36 AM | Last Updated : 04th August 2019 03:36 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை அருகே திருவரங்குளத்தில் உள்ள அருள்மிகு பெரியநாயகி உடனுறை அரங்குளநாதர் திருக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த மாதம் 25ஆம் தேதி கொடியேற்றத்துடன், ஆடிப்பூரத் திருவிழா தொடங்கியது.
முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இரவு திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது.
நைனாரி குளத்தில் தவமிருந்த அம்பாள் குதிரை வாகனத்தில் அழைத்து வரப்பட்டார். அம்பாளின் உறவினர்களான வல்லநாடு நகரத்தார், தங்க நகை உள்ளிட்ட சீர்வரிசைகளை எடுத்து வந்தனர்.
தொடர்ந்து திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை அலுவலர்களுடன் சிவாச்சாரியார்கள் தெ. மீனாட்சிசுந்தரம், குமார் உள்ளிட்டோரும் செய்திருந்தனர்.
இதேபோல், ஆடிப்பெருக்கை முன்னிட்டு புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள பல்லவன் குளத்தில் ஏராளமான பெண்கள் சனிக்கிழமை வழிபாடு நடத்தினர்.
சனிக்கிழமை காலையும், மாலையும் இங்கு பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். வாழைப்பழம், தேங்காய், பூக்களுடன் வழிபாடு நடத்திய பெண்கள், தொடர்ந்து மஞ்சள் கயிறு அணிந்து கொண்டனர். சிறுவர்கள் கைகளில் மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டனர்.
விராலிமலையில்...
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி விராலிமலை, அன்னவாசல், இலுப்பூர் பகுதி கோயில்களில் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
விராலிமலை சுப்பிரமணியர் மலைக்கோயில், மெய்க்கம்ணுடையாள், வன்னிமரம், அய்யப்பன், ஆஞ்சநேயர் கோயில், நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி வழிபாடு நடத்தினர்.
இதேபோல் இலுப்பூர், அன்னவாசல், வயலோகம், இருந்திரப்பட்டி, குடுமியான்மலை, வெள்ளனூர், சத்தியமங்கலம், பரம்பூர், உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
கந்தர்வகோட்டையில்...
ஆடிபெருக்கு விழாவையொட்டி, கந்தர்வகோட்டை ஆபத்சகாயேஸ்வரர் கோயில் முன்பு உள்ள சங்கூரணி குளக்கரையில், கந்தர்வகோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள், புதுமண தம்பதிகள் சிறப்பு வழிபாடு நடத்தினர். புதுமண தம்பதிகள், பெண்கள் உள்ளிட்டோர் தங்களுக்குள் மஞ்சள் கயிறுகளை மாற்றிக் கொண்டனர்.
பொன்னமராவதியில்...
பொன்னமராவதி பகுதியில் உள்ள கோயில்களில் ஆடிப்பெருக்கினையொட்டி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி சோழீஸ்வரர் கோயில், அழகியநாச்சியம்மன் கோயில், நகரத்தார் சிவன் கோயில், வலையபட்டி மலையாண்டிகோயில், கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில், தேனிமலை சுப்பிரமணியர் கோயில், வேந்தன்பட்டிநெய்நந்தீஸ்வரர்கோயில், காரையூர் முத்துமாரியம்மன் கோயில், திருக்களம்பூர் கதலிவனேஸ்வரர் கோயில், வார்ப்பட்டு சூலப்பிடாரி அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதுமண தம்பதியர் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.
கண்டியாநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆடுப்பெருக்கினையொட்டி மாணவ, மாணவியர்களால் வடிவமைக்கப்பட்ட சிறிய தேர் பவனி வரும் விழா நடைபெற்றது. சிறிய தேரில் விநாயகப்பெருமானை எழுந்தருள செய்து, ஊர்வலமாக சென்று காமாட்சியம்மன் கோயில், சுப்பிரமணியர் கோயில், விநாயகர் கோயில்களில் சென்று வழிபட்டனர்.
ஆலங்குடியில்...
ஆலங்குடி அருகேயுள்ள பிரசித்தி பெற்ற நாடியம்மன் கோயிலில் ஆடிப்பெருக்கையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதேபோல, கீரமங்கலம் மெய்நின்நாதர் கோயிலில் உள்ள ஒப்பிலாமணி அம்மனுக்கு வளையல் அணிவித்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில், கலந்துகொண்ட பெண்கள் கழுத்தில் மஞ்சள் கயிறு அணிந்தும், ஆண்கள் கைககளில் மஞ்சள் கயிறு கட்டியும் வழிபட்டனர்.
ஆலங்குடி, வடகாடு, கொத்தமங்கலம், அணவயல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.