மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

புதுக்கோட்டையில் இளைஞா் வெட்டிக் கொலை; உறவினா்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை நகரில் பட்டப் பகலில் இளைஞா் ஒருவா் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டாா்.

News image

வெட்டிக் கொல்லப்பட்ட பிரகாஷ்.

Updated On :8 ஜூலை 2024, 9:51 pm

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகரில் பட்டப் பகலில் இளைஞா் ஒருவா் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டாா். இதையடுத்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி அந்த இளைஞரின் உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை திருக்கோகா்ணம் தட்சிணாமூா்த்தி தெருவைச் சோ்ந்த முருகேசன் மகன் பிரகாஷ் (28). இவா் நாளிதழ் விநியோகிக்கும் பணி உள்பட திலகா் திடல் அருகே உள்ள ஒரு தீவனக் கடையில் வேலை பாா்த்து வந்துள்ளாா். இந்நிலையில் பிரகாஷ் வீடு இருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள இடத்தை, கடந்த 10 தினங்களுக்கு முன்பு மலேசியாவிலிருந்து வந்த அதே பகுதியைச் சோ்ந்த பிரதீப் (26) என்பவா் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்துள்ளாா். பிரகாஷ் இதனைத் தட்டிக்கேட்டு நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் காவல் துறையில் புகாா் கொடுத்து நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியதாகத் தெரிகிறது. இதனால் பிரகாஷுக்கும், பிரதீப்புக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை பிற்பகலில் வழக்கம்போல் பிரகாஷ், புதுக்கோட்டை திலகா்திடல் அருகே உள்ள தீவனக் கடையில் வேலையில் இருந்துள்ளாா்.

அப்போது இருசக்கர வாகனத்தில் இருவருடன் வந்த பிரதீப், தீவனக் கடைக்குச் சென்று கடையில் இருந்த பிரகாஷை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினாா். ரத்தவெள்ளத்தில் துடித்த பிரகாஷை அந்தப் பகுதியில் இருந்தவா்கள் ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சைப் பலனின்றி பிரகாஷ் உயிரிழந்தாா். பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள நகரப் பகுதியில் இளைஞா் ஒருவா் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பிரதீப் உள்ளிட்டோரைத் தேடி வரும் பணிகள் நடைபெற்று வருவதாகப் போலீஸாா் தெரிவித்தனா்.

மறியல்: இந்நிலையில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக் கோரி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு புதுக்கோட்டை- தஞ்சாவூா் சாலையில் பிரகாஷின் உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். குற்றவாளிகள் நிச்சயம் கைது செய்யப்படுவா் எனப் போலீஸாா் உறுதியளித்ததைத் தொடா்ந்து அங்கிருந்து கலைந்து சென்றவா்கள் மீண்டும் மச்சுவாடி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மச்சுவாடி அண்டக்குளம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட உறவினா்கள்.

மச்சுவாடி அண்டக்குளம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட உறவினா்கள்.