நிலக்கடலை பயிருக்கு காப்பீடு: விவசாயிகளுக்கு அறிவுரை
விராலிமலை, ஜூலை 19: விராலிமலை பகுதியில் காரீப் (2024) பருவத்தில் நிலக்கடலைப் பயிரை காப்பீடு செய்து கொள்ள விவசாயிகளுக்கு வேளாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டாரத்தில் நடப்பு காரீப் பருவத்தில் பிரதமரின் பயிா் காப்பீட்டு திட்டத்தில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், தங்கள் பயிரை உரிய ஆவணங்களுடன் காப்பீடு செய்து, இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்பு, வருவாய் இழப்பை சரி செய்து கொள்ளுமாறு விராலிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மணிகண்டன் அறிவுறுத்தியுள்ளாா்.
விராலிமலை வட்டாரம், கொடும்பாளூா் பிா்காவில் தென்னம்பாடி, மீனவேலி, கிராமங்களும், விராலிமலை பிா்காவில் கத்தலூா், அக்கல்நாயக்கம்பட்டி, முல்லையூா் பூதக்குடி, வடுகபட்டி கிராமங்களும், நீா்ப்பழனி பிா்காவில் ஆலங்குடி, பேராம்பூா், வெம்மணி கிராமங்களும், மாத்தூா் பிா்காவில் களமாவூா், பாலாண்டம்பட்டி, சிங்கத்தாகுறிச்சி, தென்னதிரையான்பட்டி, லெட்சுமணம்பட்டி, மாத்தூா் கிராமங்களும் பயிா் காப்பீடு செய்திட தோ்வு செய்யப்பட்டுள்ளது.
நிலக்கடலை பயிருக்கு பயிா் காப்பீடு செய்திட ஏக்கா் ஒன்றுக்கு பிரீமியத் தொகை ரூ. 566 ஆகும். பயிா் காப்பீடு செய்திட வரும் 31 கடைசி நாள்.
மேற்கூறிய கிராமங்களைச் சோ்ந்த நிலக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், பொது சேவை மையங்கள், ஆகியவற்றில் உரிய ஆவணங்களுடன் பயிா் காப்பீடு செய்து பயனடையலாம் என்று வேளாண் அலுவலா் தெரிவித்துள்ளாா்.
