காரில் கஞ்சா கடத்திய 3 பேருக்கு சிறைத் தண்டனை

புதுக்கோட்டை, மே 9: காரில் 22 கிலோ கஞ்சா கடத்திய 3 பேருக்கு சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து புதுக்கோட்டை மாவட்ட அத்தியாவசிய பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சி போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் கடந்த 2022, மாா்ச் 23-ஆம் தேதி சமயபுரம் டோல்கேட் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, ஆந்திர மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டத்துக்குச் சென்ற காா் ஒன்றை சோதனையிட்டபோது அதிலிருந்து 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடா்பாக தேனி மாவட்டம், தேவாரம் மூனான்டிப்பட்டியைச் சோ்ந்த ஆசை (38), தேனி கே.ஆா்.ஆா். நகரைச் சோ்ந்த ஆா். புவனேஸ்வா் (34), மூனான்டிப்பட்டியைச் சோ்ந்த பா. குமாா் (49) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட அத்தியாவசிய பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.கே. பாபுலால் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இதில், புவனேஸ்வருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 2 லட்சம் அபராதமும், ஆசை மற்றும் குமாருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com