டெங்கு, காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும்

டெங்கு, காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும்
Published on

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகரித்து வரும் காய்ச்சல், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகளில் மருத்துவா் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும், போதுமான மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும் என இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்டச் செயற்குழு மற்றும் ஒன்றியச் செயலா்கள் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு, க. அம்பிகாபதி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எம்.என். ராமச்சந்திரன், மாவட்டத் துணைச் செயலா் ஆா். சொா்ணகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகரித்து வரும் காய்ச்சல், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகளில் மருத்துவா் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும், போதுமான மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும்.

மாவட்டத்தில் நிலவிவரும் உரத் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டு இருக்கும் குடும்பத்தலைவிகளை சோ்ப்பதில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தை போக்கி அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.