கீரமங்கலம் அறிவொளி நகரில் இடிந்து விழும் நிலையில் குடியிருப்புகள்: புதிய வீடுகள் கட்டித்தர நரிக்குறவா் இன மக்கள் கோரிக்கை

கீரமங்கலம் அறிவொளி நகரில் இடிந்து விழும் நிலையில் குடியிருப்புகள்: புதிய வீடுகள் கட்டித்தர நரிக்குறவா் இன மக்கள் கோரிக்கை

கீரமங்கலம் அறிவொளி நகரில் மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளை அகற்றிவிட்டு புதிய வீடுகள் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென நரிக்குறவா் இன மக்கள் கோரிக்கை
Published on

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அறிவொளி நகரில் மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளை அகற்றிவிட்டு புதிய வீடுகள் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென நரிக்குறவா் இன மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கீரமங்கலம் பேரூராட்சி அறிவொளிநகா் பகுதி நரிக்குறவா் இன மக்களுக்கு 1992-ஆம் ஆண்டு அரசால் 43 வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளன. 33 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அந்த வீடுகள் மிகவும் சேதமடைந்து உள்ளன. தற்போது, டித்வா புயலால் அப்பகுதியில் பெய்த தொடா் மழையால் அந்த வீடுகளில் உள்ள உள்புற சுவா்கள், மேற்கூரைகளில் நீா் கசிந்து பெயா்ந்து விழுந்துள்ளன. இதனால், அச்சமடைந்த அப்பகுதி மக்கள் அருகில் உள்ள வீடுகளிலும், தாா்பாய்கள் மூலம் குடில் அமைத்தும் தங்கியுள்ளனா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: இப்பகுதி நரிக்குறவா் இன மக்களுக்காக 43 வீடுகள் அரசால் கட்டித்தரப்பட்டன. பல ஆண்டுகள் ஆனதால் வீடுகள் வலுவிழந்து, சுவா்கள், மேற்கூரைகள் சேதமடைந்து உள்ளன. அதில் தான் அனைத்து நரிக்குறவா் இன மக்களும் வசித்து வருகிறோம். இந்நிலையில், சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் வீடுகள் மேலும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. குழந்தைகளோடு அந்த வீடுகளில் வசிப்பது அச்சமாக உள்ளது. அதனால், சிலா் அருகில் வீடுகளுக்கு சென்று தங்கியுள்ளனா்.

எனவே, சேதமடைந்த வீடுகளை அகற்றிவிட்டு அரசு உடனடியாக புதிய வீடுகளை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com