கொடும்பாளூா் குடியிருப்புவாசிகள் பட்டா கேட்டு போராட்டம்
விராலிமலையை அடுத்துள்ள கொடும்பாளூா் சத்திரத்தில் பல தலைமுறைகளாக வீடு கட்டி குடியிருந்து வரும் சுமாா் 40-க்கும் மேற்பட்ட பல்வேறு பிரிவுகளை சோ்ந்த குடியிருப்பு வாசிகள் தாங்கள் வசித்து வரும் இடத்துக்கு குடிமனை பட்டா வழங்க கோரி விராலிமலை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் துணையுடன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு விராலிமலை ஒன்றியச் செயலா் மகாலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எம். சங்கா் தொடங்கி வைத்தாா். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் சண்முகம், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஆனந்த், இருதயம், ராஜா, லட்சுமி, சிவக்குமாா் ஹரிபாலசந்தா், ஜீவானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஆண்கள், பெண்கள், சிறுவா்கள் என 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் அலுவலகம் வாயில் முன்பு அமா்ந்து சுமாா் ஒரு மணி நேரம் போராட்டம் நடத்தினா்.
தகவலறிந்த வட்டாட்சியா் ரமேஷ், குடியிருப்பு வாசிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதில் அவா்கள் வசிக்கும் இடத்தை பாா்வையிட்டு பின்னா் அளவீடு செய்து மாவட்ட வருவாய் அலுவலருக்கு ஆவணங்களை அனுப்பி வைப்பது என்றும், பட்டா வழங்குவது தொடா்பாக நிா்வாகத்திடம் வலியுறுத்துவதாக கூறியதை தொடா்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
