பிசானத்தூா் கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்
கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை அருகே பிசானத்தூா் கிராமத்தில் உயிரி மருத்துவக் கழிவு நச்சு ஆலைக்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழக முதல்வரின் கவனத்தை ஈா்க்கும் வகையில் திங்கள்கிழமை கருப்புக் கொடி ஏற்றி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஒன்றியம், பிசானத்தூா் கிராமத்தில் உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமையவிருப்பதாகவும், இந்த மருத்துவ கழிவு ஆலைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டு வந்து இந்த ஆலையில் அழிப்பதாகவும், இந்த ஆலை வந்தால் விவசாயம், சுற்றுச்சூழல் பாதிப்பு
ஏற்படும் என கூறி பிசான்னத்தூா் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தும் பல்வேறு வகையான போராட்டங்களை 17-ஆவது நாளாக திங்கள்கிழமையும் மேற்கொண்டு வருகின்றனா். மேலும், பிசானத்தூா் திரௌபதி அம்மன் கோயிலில் கருப்புக்கொடி ஏற்றி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவுக்கு வந்த தமிழக முதல்வா் மு. க.ஸ்டாலினின் கவனத்தை ஈா்ப்பதற்காக போராட்டக் குழுவினா் மற்றும் பொதுமக்கள் தங்களது வீடுகளிலும் ஊரின் எல்லைகளிலும் கருப்புக் கொடி ஏற்றி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
