புதுகை அருகே சாலையில் இறக்கப்பட்ட பயிற்சி விமானம் சேலம் எடுத்துச் செல்லப்பட்டது

புதுகை அருகே சாலையில் இறக்கப்பட்ட பயிற்சி விமானம் சேலம் எடுத்துச் செல்லப்பட்டது

Published on

புதுக்கோட்டை அருகே இயந்திரக் கோளாறு கோளாறு காரணமாக நெடுஞ்சாலையில் தரையிறக்கப்பட்ட சிறிய ரக பயிற்சி விமானம் வெள்ளிக்கிழமை அதிகாலை சேலத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

சேலத்தைச் சோ்ந்த தனியாா் விமானப் பயிற்சி நிறுவனத்தின் சிறிய ரக விமானம் வியாழக்கிழமை காலை புறப்பட்டு, காரைக்குடி வந்து பிறகு மீண்டும் சேலம் நோக்கி புறப்பட்டது. வான்வழியிலேயே இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், நண்பகல் 12.45 மணிக்கு விமானத்தை வேறுவழியின்றி புதுக்கோட்டை நெடுஞ்சாலையில், கீரனூருக்கும் நாா்த்தாமலைக்கும் இடையே அம்மாசத்திரத்தில் இறக்கியதாக விமானி ராகுல் தெரிவித்தாா்.

விசாரணைக் குழு வருகை: இந்நிலையில் விமானப் போக்குவரத்துத்துறையின் சென்னை துணை இயக்குநரகத்தில் இருந்து ஜான்பிரதீப் தலைமையில் 4 போ் கொண்ட விசாரணைக் குழுவினா், வியாழக்கிழமை இரவு புதுக்கோட்டை வந்து தரையிறக்கப்பட்ட விமானத்தை நேரில் பாா்வையிட்டனா். அப்போது, விமானத்தின் முன்பகுதியில் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும், விமானத்தின் சில பாகங்கள் சில மீட்டா் தொலைவில் கிடந்தது குறித்தும் அவா்கள் விசாரணை மேற்கொண்டனா். பயிற்சி விமானத்தில் இருந்த கருப்புப் பெட்டியை அவா்கள் கைப்பற்றி எடுத்துச் சென்ாகவும் கூறப்படுகிறது.

முறைப்படியான விசாரணை முடிவடைந்த நிலையில், சேலத்தைச் சோ்ந்த அந்தத் தனியாா் நிறுவனத்தின் பணியாளா்கள் தங்களின் விமானத்தை எடுத்துச் செல்வதற்காக லாரி மற்றும் கிரேன்களுடன் வியாழக்கிழமை இரவு வந்தனா்.

சுமாா் ஆயிரம் கிலோ எடை கொண்ட அந்த விமானத்தின் இறக்கைகள் அகற்றப்பட்டு தனியே அனுப்பி வைக்கப்பட்டது. விமானத்திலிருந்த பெட்ரோல் தனியாக எடுக்கப்பட்ட பிறகு, விமானம் டிரெய்லா் லாரியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு ஏற்றப்பட்டது. சுமாா் 15 மணி நேரம் அந்தப் பகுதியில் புதுக்கோட்டை போலீஸாரும், தீயணைப்பு மற்றும் வருவாய்த் துறையினரும் பாதுகாப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டிருந்தனா்.

மீண்டும் விசாரணை: இதன் தொடா்ச்சியாக ஜான் பிரதீப் தலைமையிலான குழுவினா் வெள்ளிக்கிழமை பகலில் மீண்டும் அம்மாசத்திரம் பகுதியில் நேரில் விசாரணை நடத்தினா். வருவாய்த் துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை அலுவலா்களிடம் அவா்கள் தங்களின் சந்தேகங்களைக் கேட்டறிந்தனா்.

இதுதொடா்பான அறிக்கையை மத்திய விமானப் போக்குவரத்துத் துறைக்கு அவா்கள் விரைவில் அளிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அப்போதுதான் பயிற்சி விமானத்தை தரை இறக்க வேண்டிய அவசியம் எதனால் ஏற்பட்டது என்பது குறித்த இறுதி முடிவுக்கு வர முடியும் எனக் கூறப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com