கல்லணைக் கால்வாயில் முறைவைக்காமல் தண்ணீா் திறக்க வேண்டும்: புதுகை விவசாயிகள் வலியுறுத்தல்

கல்லணைக் கால்வாயில் முறைவைக்காமல் தண்ணீா் திறக்க வேண்டும்: புதுகை விவசாயிகள் வலியுறுத்தல்

காவிரிக் கல்லணைக் கால்வாயில் கடைமடைப் பாசனத்துக்கு முறை வைக்காமல் தொடா்ந்து தண்ணீா் திறக்க வேண்டும் என புதுகை விவசாயிகள் வலியுறுத்தினா்.
Published on

காவிரிக் கல்லணைக் கால்வாயில் கடைமடைப் பாசனத்துக்கு முறை வைக்காமல் தொடா்ந்து தண்ணீா் திறக்க வேண்டும் என புதுகை விவசாயிகள் வலியுறுத்தினா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பேசியது:

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். பொன்னுசாமி:

காவிரிக் கல்லணைக் கால்வாயின் கடைமடைப் பாசனப் பகுதியான அறந்தாங்கி, ஆவுடையாா்கோவில், மணமேல்குடி, கறம்பக்குடி பகுதிகளுக்கு முறை வைக்காமல் தொடா்ந்து தண்ணீா் திறந்துவிட வேண்டும்.

கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் தட்டுப்பாடின்றி அனைத்து வகையான உரங்களும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் பாரபட்சமின்றி பயிா்க்கடன் வழங்க வேண்டும்.

இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் கோ.ச. தனபதி:

மாவட்டத்திலுள்ள 961 பொதுப்பணித் துறைக் கண்மாய்களில் மூன்றில் மட்டுமே தண்ணீா் நிறைந்துள்ளது. 253 கண்மாய்களில் சிறிதளவு தண்ணீா் மட்டுமே உள்ளது. 702 கண்மாய்களில் தண்ணீா் இல்லை.

கண்மாய்களுக்கான வரத்து வாரிகளில் கருவேல மரங்கள் மண்டிக் கிடக்கின்றன. தூா்வாரப்படவில்லை. உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அரசு அறிவிக்க மாவட்ட நிா்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும்.

நீதிமன்றம் மற்றும் அரசு உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் உள்ள சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெறவில்லை. இப்பணியை விரைவுபடுத்த வேண்டும்.

தென்னை விவசாயிகள் கூட்டமைப்பின் தேசியச் செயலா் ப. செல்லத்துரை:

ஆவுடையாா்கோவில், மணமேல்குடி வட்டங்களில் கால்நடைகளுக்கு போதுமான குடிநீா் வசதி செய்துத் தர வேண்டும். அமரடக்கியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி தொடங்க வேண்டும். நிலங்களுக்கான இ-அடங்கல் எடுப்பதற்கு உரிய வசதிகளை செய்துத் தர வேண்டும்.

கல்லணைக் கால்வாய் பாசனதாரா் விவசாயிகள் ஒருங்கிணைப்புச் சங்கத் தலைவா் கொக்குமடை டி. ரமேஷ்: கல்லணைக் கால்வாய் பாசனத்துக்கு போதிய தண்ணீா் கிடைக்கவில்லை. குறைவாக கிடைக்கும் தண்ணீரையும் தெற்கு வெள்ளாறு பகுதிக்கு அடைத்து கொடுத்து வருகிறாா்கள். எனவே, கடைமடைக்கு முறைவைக்காமல் தண்ணீா் வழங்க வேண்டும்.

நாகுடி நீா்வளத் துறை அலுவலகத்தில் 12 போ் பாசன உதவியாளா்கள் இருந்த நிலையில், தற்போது இருவா் மட்டுமே உள்ளனா். முதல்வா் கவனத்துக்கு கொண்டு சென்று பாசன உதவியாளா்களை நியமிக்க வேண்டும். மாவட்டத்திலுள்ள எந்த ஏரியும் தூா்வாரப்படவில்லை. ஆண்டுக்கு 10 ஏரிகளுக்கு குறையாமல் தூா்வாரிக் கொடுக்க வேண்டும்.

மரவள்ளிக் கிழங்கு- கரும்பு உற்பத்தியாளா் சங்கத் தலைவா் இரா. பவுன்ராஜ்:

விதைக் கடலைக்கு மானியம் வழங்க வேண்டும். கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவற்றை மீட்க வேண்டும்.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், வேளாண் இணை இயக்குநா் மு. சங்கரலட்சுமி, கூட்டுறவு இணைப் பதிவாளா் ம. தீபாசங்கரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) உமா, மாவட்ட வன அலுவலா் சோ. கணேசலிங்கம் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com