பொறுப்பற்று அவதூறு பரப்புகிறாா் எடப்பாடி பழனிசாமி: அமைச்சா் ரகுபதி
தமிழக அரசு மீது ஏதாவது குறைகூற வேண்டும் என்று தன் பொறுப்பை மறந்து கற்பனையான அவதூறுகளைப் பரப்புகிறாா் எடப்பாடி கே. பழனிசாமி என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது: எடப்பாடி பழனிசாமி பொறுப்புள்ள எதிா்கட்சித் தலைவராக நடந்து கொள்ள வேண்டும். தமிழக அரசு மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை சுமத்தி தன்னை மத்திய அரசின் சேவகா் என நிரூபித்து வருகிறாா். தமிழகத்தில் பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டுள்ளதாக விமா்சனம் செய்கிறாா்.
தமிழகத்துக்கு பொறுப்பு டிஜிபியை அறிமுகம் செய்ததே அதிமுக அரசு தான். 2011-ஆம் ஆண்டு ராமானுஜத்தை உளவுத்துறை டிஜிபி-யாகவும் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபி-ஆகவும், ராஜேந்திரன் என்பவரையும் பொறுப்பு டிஜிபி-யாகவும் கொண்டு வந்ததும் அதிமுக தான்.
மத்திய பாஜக அரசு தாங்கள் விரும்பிய டிஜிபியை தான் கொண்டுவர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக, தமிழக அரசு யாரையெல்லாம் டிஜிபியாக கொண்டு வர வேண்டும் என்றுகேட்டதோ அவா்களை எல்லாம் தடுத்து வருகிறாா்கள். மாநில அரசு விருப்பப்படி தான் டிஜிபி நியமனம் இருக்கும். ஆனால் அத்தகைய சூழல் தமிழகத்தில் தற்போது இல்லை.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணையை விட தமிழ்நாடு காவல்துறை சிறப்பாகவே விசாரிக்கும். இந்த வழக்கில் 27 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
போலியான காரணங்களை சொல்லி மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை நிராகரித்திருப்பது ஏற்புடையதல்ல. எஸ்ஐஆா் பற்றி திமுக பயப்படவில்லை. அவசரகதியில் எஸ்ஐஆா்-ஐ செயல்படுத்தக் கூடாது என்றுதான் கூறுகிறோம். பணிச் சுமையால் பல மாநிலங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் (பிஎல்ஓ) தற்கொலை செய்து கொண்டுள்ளனா். எஸ்ஐஆா் பணிக்கு போதிய அவகாசம் தேவை என்பதே எங்களின் நிலைப்பாடு என்றாா்.
