ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதிகளை மூட வேண்டாம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதிகளை மூட வேண்டாம் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா் வெளியிட்ட அறிக்கை:
திருமயம் லெனின் நகா், சத்தியமங்கலம் மேலூா், கொடும்பாளூா் சத்திரம், ஆலங்குடி கலிபுல்லா நகா், மணமேல்குடி அம்மாபட்டினம் என மாவட்டத்தில் பல இடங்களில் நீா்நிலைப் புறம்போக்குகளில் வசிப்போரை நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி அவா்களின் வாழ்விடங்களை இடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது நியாயமல்ல.
நீதிமன்றத்தில் நியாயத்தை எடுத்து வைத்து இடிப்பு நடவடிக்கையை நிறுத்த மாவட்ட நிா்வாகம் முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் முறையான மாற்று இடம் வழங்க நவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுக்கோட்டை, கந்தா்வகோட்டை, வெட்டன்விடுதி, ஆலங்குடி, அறந்தாங்கி, மீமிசல், மணமேல்குடி, ஏம்பல், பொன்னமராவதி, அரிமளம், திருமயம், அன்னவாசல், குளத்தூா், கீரனூா், ஒடுகம்பட்டி, வடகாடு, மரமடக்கி ஆகிய 17 மாணவா் விடுதிகளையும், ஆலங்குடி, ஒக்கூா் ஆகிய மாணவிகள் விடுதிகளையும் சோ்த்து மொத்தம் 19 ஆதிதிராவிடா் மாணவ, மாணவிகள் விடுதிகளை வருகை குறைந்துள்ளதாக கூறி மூடும் நடவடிக்கையை ஆதிதிராவிடா் நலத் துறை மேற்கொண்டு வருகிறது.
இந்த விடுதிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தினால், மாணவா்கள் விடுதிகளில் தங்குவாா்கள். அதைவிடுத்து விடுதிகளை மூடக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
